ஜி.20 மாநாட்டில் பங்கேற்ற உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் அவர்களின் மனைவிமார்களுக்கு சிறுதானிய உணவுகள் கலந்த பலவகையான ராஜ்ஜிய உணவுகள் வழங்கப்பட்டன. அந்த வகையில் ஜி.20 மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி விரும்பி உண்ட இரண்டு சிறுதானியங்கள் தற்போது அனைவரின் கவனத்தையும் பெற்று வருகின்றன.
2023, ஜி.20 மாநாடு செப்டம்பர் 9, 10 தேதிகளில் டெல்லியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
புதுடெல்லியின் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டில், ஜி20-ன் சிறப்பு விருந்தினர்கள் சுமார் 170 பேருக்கு அதிகாரபூர்வ `இரவு உணவு’ ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
ஜனாதிபதி திரௌபதி முர்மு இந்த விருந்தை வழங்கினார். மெனுவில் வழங்கப்பட்ட உணவுகள் பெரும்பாலும் சிறுதானியங்கள் சார்ந்த உணவாக இருந்தன.
அதிலும் மிகவும் சத்துள்ள சிறுதானியங்களிலிருந்து விதவிதமான புதிய ருசிகர உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. உணவு ஏற்பாடுகளை ஐ.டி.சி ஹோட்டல் மேற்கொண்டிருந்தது. ஐடிசி-யின் இரண்டு பெண் சமையல் கலைஞர்கள், 20 சிறுதானியங்கள் சார்ந்த உணவுகளின் மெனுவை தயாரித்து இருந்தனர். இந்த இரவு உணவுக்கு பல நாடுகளின் தலைவர்களும் அவர்களின் மனைவிகளும் வந்திருந்தனர்.