ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பார்டர் கவாஸ்கர் தொடரில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இரண்டாவது இன்னிங்ஸில் மட்டுமே பேட்டிங்கில் ஜொலித்து வெற்றி பெற்ற இந்திய அணி, அடுத்த டெஸ்டில் பரிதாபகரமாகத் தோல்வியடைந்தது.
முதல் இரண்டு டெஸ்டில், 4 இன்னிங்ஸ்களில் 3 இன்னிங்ஸில் 200 ரன்களைக் கூட தாண்டாத இந்திய அணி, கப்பாவில் நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் சொதப்பிவருகிறது.

முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்தாக, அடுத்த ஒன்றரை நாள் முழுக்க நின்ற ஆஸ்திரேலிய அணி டிராவிஸ், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் அதிரடி நிதான ஆட்டத்தால் முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணியில், ஓப்பனிங் பேட்ஸ்மேன் கே.எல். ராகுல் மட்டும் நிற்க, ஜெய்ஸ்வால், கில், கோலி, பண்ட் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணி 51 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்தது. கே.எல். ராகுலும், ரோஹித்தும் களத்தில் நின்றனர்.
இன்று நான்காம் ஆட்டம் தொடங்கும்போது இந்திய அணி ஃபாலோ-ஆனைத் (Follow-On) தவிர்க்க 245 ரன்களைக் கடக்க வேண்டும் என்ற இலக்கு இந்தியாவுக்கு இருந்தது. ரோஹித் 10, நிதிஷ் குமார் ரெட்டி 16, சிராஜ் 1 என அவுட்டானபோதும், கே.எல்.ராகுலின் 84 மற்றும் ஜடேஜாவின் 77 ரன்கள் உதவியுடன் 9 விக்கெட்டுகளுக்கு 213 ரன்களைக் குவித்தது. கடைசி ஒரு விக்கெட் மட்டுமே இந்திய வசம் இருக்க, ஃபாலோ-ஆனில் இந்தியாவை சுருட்ட அடுத்த 30 ரன்களுக்குள் அந்த ஒரு விக்கெட்டையும் வீழ்த்த ஆஸ்திரேலிய பவுலர்கள் தீவிரம் காட்டினார்.
Virat Kohli's reaction on akashdeep Saving Follow-on for team india, and the after hitting six.#INDvsAUS pic.twitter.com/RLK598FZEB
— Utkarsh (@toxify_x18) December 17, 2024
ஆனாலும், கடைசி விக்கெட்டுக்கு பும்ராவும், ஆகாஷ் தீப்பும் கிட்டத்தட்ட ஒன்பது ஓவர்கள் நின்று இந்திய அணியை 245-ஐ கடக்க வைத்தனர். நான்காம் நாள் ஆட்டம் நேர முடிவில் இந்திய அணி 252 ரன்கள் குவித்தது. இன்னும் ஒரு விக்கெட் கையிலிருக்கிறது. நாளைதான் கடைசி நாள் ஆட்டம் என்பதால் பெரும்பாலும் இந்தப் போட்டி டிராவில் முடியவே வாய்ப்பிருக்கிறது. இந்த நிலையில், ஃபாலோ-ஆனைத் தவிர்க்க மூன்று ரன்கள் தேவை என்றபோது கம்மின்ஸ் ஓவரில் ஆகாஷ் தீப் பவுண்டரி அடிக்க, கேலரியிலிருந்து கம்பீர், கோலி ஆகியோர் துள்ளிக் குதிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கிறது. இந்திய அணி பெருமூச்சு விடுமளவுக்கு ஃபாலோ-ஆன் என்றால் என்ன? அதன் விதிமுறைகள் என்ன?
ஒருநாள் போட்டி, டி20 போட்டிகள் போலல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு இன்னிங்ஸ்கள் என்பதால் இந்த ஃபார்மெட்டில் மட்டும் ஃபாலோ-ஆன் விதிமுறை பின்பற்றப்படுகிறது. இந்த விதிமுறைப்படி, டெஸ்ட் போட்டிகளில் முதல் இன்னிங்ஸில் இண்டாவதாக பேட்டிங் செய்யும் அணி, முதலில் பேட்டிங் செய்த அணியின் ஸ்கோரை விட 200 ரன்கள் பின்தங்கியிருக்கக் கூடாது. எடுத்துக்காட்டாக இந்தப் போட்டியை எடுத்துக்கொண்டால், முதல் இன்னிங்ஸில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 445 ரன்கள் அடித்தது.

இந்திய அணி ஃபாலோ-ஆனைத் தவிர்க்க 245 ரன்களைக் கடக்க வேண்டிய சூழல் உருவானது. அதாவது 200 ரன்கள் வித்தியாசம். ஒருவேளை இந்திய அணி 245 ரன்களுக்குள் சுருண்டிருந்தால், மீண்டும் இந்திய அணி பேட்டிங் செய்திருக்க வேண்டும். அதில், ஆஸ்திரேலிய அணியை விட எவ்வளவு பின்தங்கியிருக்கிறதோ அதைவிட அதிகமாக அடிக்கின்ற ரன்கள் இறுதி இலக்காக அமையும், அப்படி அதிகமாக அடிக்காமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தால் எதிரணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இப்போது, இந்த டெஸ்டில் 245 ரன்களைக் கடந்துவிட்டதால் இந்திய அணி எந்தப் பிரச்னையும் இல்லை.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…