கால்பந்து உலகக்கோப்பையை நடத்தும் நாடு இதுவரை தொடரின் முதல் போட்டியில் தோற்றதே இல்லை. ஆனால், இந்த கத்தார் அந்த சாதனையை முறியடித்திருக்கிறது.
வெலன்சியா பிரேஸ் மட்டுமில்லை. ஹாட்ரிக்கும் அடித்திருக்க வேண்டும். ஆனால், நடுவர்களின் சர்ச்சையான முடிவால் அது நடக்காமல் போனது. உலகக்கோப்பையே விவாதத்தை கிளப்பும் வகையிலான ஒரு முடிவோடுதான் தொடங்கியிருக்கிறது. ஆட்டம் தொடங்கிய மூன்றாவது நிமிடத்திலேயே ஈக்குவேடாருக்கு ஒரு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்திருந்தது. இதை சரியாக பயன்படுத்தி கத்தார் கோல் கீப்பரின் கவனக்குறைவை சாதகமாக்கி வெலன்சியா மூன்றாவது நிமிடத்திலேயே ஒரு கோலை போட்டார். கோலும் வழங்கப்பட்டது. ஆனால், பின்னர் VAR மூலம் பரிசோதித்த போது இந்த கோல் ஆஃப் சைடு என அறிவிக்கப்பட்டது. ஃப்ரீ கிக் மூலம் பந்து உதைக்கப்பட்ட சமயத்தில் ஈக்குவேடார் வீரர் ஒருவரின் கால் மட்டும் கத்தார் அணியின் கடைசிக்கு முந்தைய டிஃபண்டரை தாண்டி இருந்தது. அதனாலயே கோல் வழங்கப்படாமல் ஆஃப் சைடு என அறிவிக்கப்பட்டது.
கோல் இல்லையென்றாலும் ஈக்குவேடார் ஓய்ந்து விடவில்லை. தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்திக் கொண்டே இருந்தனர். Ball Possession முழுவதும் ஈக்குவேடாரிடமே இருந்தது. ஆட்டத்தை முழுமையாக ஈக்குவேடாரே கட்டுப்படுத்தியது. கத்தார் கடுமையாக திணறியது. 16 வது நிமிடத்தில் ஈக்குவேடார் முதல் கோலை அடித்தது. அதை அடித்துக் கொடுத்ததும் வெலன்சியாதான். பாக்ஸூக்குள் ஒரு பெனால்டியை சம்பாதித்து அதை கோலாகவும் மாற்றிக் காட்டினார்.