இரண்டாவது பாதியில் லிவர்பூல் அதிரடியான கம்பேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டாவது பாதி தொடங்கிய எட்டே நிமிடங்களில் இரண்டாவது கோலை அடித்தது மான்செஸ்டர் யுனைடட். கோலடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் ஒட்டுமொத்த லிவர்பூல் அணியும் அட்டாக் செய்தது. அனைவரும் யுனைடட் பாதியிலிருந்த நேரத்தில், பந்தை மீட்டு கவுன்ட்டர் அட்டாக்கைத் தொடங்கியது யுனைடட். லிவர்பூல் கேப்டன் ஜோர்டன் ஹெண்டர்சன் ஒரு பாஸைத் தவறாகச் செய்ய, பந்தைப் பெற்ற ஆன்டனி மார்ஷியல், ரேஷ்ஃபோர்டை ரிலீஸ் செய்தார். புயல் வேகத்தில் முன்னேறிய ரேஷ்ஃபோர்ட், ஆலிசனை ஏமாற்றி கோலடித்தார். 2-0.
அதன்பிறகு லிவர்பூல் மாற்றி மாற்றி அட்டாக்குகளை மேற்கொண்டது. ஆனால் அவர்களால் கோலடிக்கவே முடியவில்லை. ஃபெபினியோவின் ஹெட்டரை டீ கே தடுத்தார். சில நல்ல வாய்ப்புகளை ராபர்டோ ஃபிர்மினோ கோட்டை விட்டார். அணியின் சூப்பர் ஸ்டார் முகமது சலாவும் பெரிதாக எந்தத் தாக்கமும் ஏற்படுத்த முடியவில்லை. ஆனால் அவர்தான் லிவர்பூல் அணியின் முதல் கோலை அடித்தார். 81வது நிமிடத்தில் லிவர்பூல் அணிக்கு கார்னர் கிடைத்தது. டிரென்ட் அனுப்பிய கார்னரை ஃபேபியோ கர்வாலோ கோல் நோக்கி அடித்தார். ஆனால் அதை டீ கே தடுத்துவிட்டார். ரீபௌண்ட்டான பந்தை ஹெட்டர் மூலம் கோலாக்கினார் சலா. அதனால் யுனைடட்டின் முன்னிலை குறைந்தது. போட்டி சூடு பிடித்தது.
கடைசி சில நிமிடங்கள் சில மாற்றங்களைச் செய்தார் டென் ஹாக். சோர்வடைந்த வீரர்களை வெளியே எடுத்துவிட்டு ஃபிரெஷாக இருந்த வீரர்களை உள்ளே அனுப்பினார். கடைசிக் கட்டத்தில் எவ்வளவு முயற்சி செய்தும் லிவர்பூல் அணியால் இரண்டாவது கோலை அடிக்க முடியவில்லை. அதன் விளைவாக 2-1 என இந்தப் போட்டியை வென்றது மான்செஸ்டர் யுனைடட்.