Doctor Viktan: காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்குத் தீர்வு சொல்ல முடியுமா… டாக்டரிடமும் காட்டிவிட்டேன். காது சுத்தமாக இருக்கிறது என்கிறார் . தலைக்குத் தண்ணீர் விட்டுக் குளிக்கும்போது இந்த மாதிரி ஏற்படுகிறது. இதற்கு வேறு என்னதான் தீர்வு?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, காது-மூக்கு- தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ்.
காதில் அலை ஓசை போல சத்தம் கேட்பதற்கு காதில் குருமி அடைத்தல், சளி அல்லது தொண்டை வலி போன்ற சாதாரண விஷயங்கள் முதல் பெரிய நோய்கள் வரை பல காரணங்கள் இருக்கலாம்.
காது -மூக்கு- தொண்டை நோய்களுக்கான மருத்துவரை அணுகினால் பரிசோதனை மற்றும் ஆடியாலஜி (audiology) டெஸ்ட் செய்து, சத்தம் கேட்பதற்கு என்ன மூல காரணம் என்று கண்டறிந்து அதற்கான சிகிச்சையைப் பரிந்துரைப்பார்.
குளித்து முடித்த பின் காதில் அடைப்பு ஏற்படுவது போல் தோன்றினால் காதில் குருமி இருக்கலாம்; அதில் நீர் சேரும்போது அந்தக் குருமி இளகுவதால் அடைப்பு ஏற்படுவது போல தோன்றலாம்.
காது மூக்கு தொண்டை நோய்களுக்கான மருத்துவரை அணுகினால் காதில் குருமி இருப்பதை உறுதிசெய்து அதை நீக்குவதற்கு சிகிச்சை அளிப்பார்.
காதில் குருமி அடைப்பு இல்லாமல் சுத்தமாக இருக்கும் பட்சத்தில் குளிக்கும் போது உள்ளே செல்லும் தண்ணீர் சிறிது நேரத்தில் தானாகவே உலர்ந்து விடும். அதைச் சுத்தம் செய்யத் தேவையில்லை. காதிலுள்ள குருமியை நீக்க நீங்களாக எந்த சுய மருத்துவமும் செய்ய வேண்டாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.