Doctor Vikatan: BP நார்மல்… ஆனாலும் இதயத்துடிப்பு அதிகரிக்கிறது… என்ன பிரச்னையாக இருக்கும்?

Share

Doctor Vikatan: எனக்கு பிபி நார்மலாக இருக்கிறது. ஆனால், இதயத்துடிப்பு 90-100 என்ற அளவில் இருக்கிறது. இதற்காக கவலைப்பட வேண்டுமா? இதயத்துடிப்பு அதிகரிப்பது என்பது ஆபத்தான அறிகுறியா? இதை எப்படிப் புரிந்துகொள்வது?

– Manobala, விகடன் இணையத்திலிருந்து…

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி

மருத்துவர் சஃபி | நாகர்கோவில்

பிபி நார்மல் எனக் குறிப்பிட்டுள்ள நீங்கள் அது எந்த அளவில் இருக்கிறது என்று குறிப்பிடவில்லை. எது நார்மல் என்பது வயதுக்கேற்ப வேறுபடும். ரத்த அழுத்தத்துக்கும் இதயத்துடிப்புக்கும் நிச்சயம் தொடர்பு உண்டு. பிபி நார்மலாக இருப்பதாக நீங்கள் குறிப்பிடுவது, சராசரியைவிட குறைவாக இருக்கவும் வாய்ப்பு உண்டு. ஆனால் அதை ஈடுகட்ட இதயத்துடிப்பானது அதிகரிக்கும். அதாவது இதயம் சற்று அதிகமாகத் துடிக்க ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் நீங்கள் இதயத்துடிப்பு அதிகமாக இருப்பதாக உணரலாம்.

உங்களுக்கு தைராய்டு பாதிப்போ, உடல் ரீதியான வேறு பாதிப்புகளோ, மனரீதியான பாதிப்புகளோ உள்ளனவா என்பதையெல்லாம் பார்த்துவிட்டுதான் இந்த விஷயம் குறித்துச் சொல்ல முடியும். உங்களுடைய வயது மற்றும் பாலினமும் குறிப்பிடப்படவில்லை. ஏனெனில் பாலினத்துக்கேற்பவும் வயதுக்கேற்பவும் ரத்த அழுத்தமும் இதயத்துடிப்பும் வேறுபடும். வேறு ஏதேனும் உடல்நலப் பிரச்னைகளுக்காக மருந்துகள் எடுக்கிறீர்களா என்றும் தெரிய வேண்டும். சில நேரங்களில் சிலவகை மருந்துகளாலும் இப்படி இதயத்துடிப்பு அதிகரிக்கலாம்.

வயிற்றில் ஏற்படக்கூடிய அல்சர் மற்றும் உணவுக்குழாய் அழற்சி (reflux esophagitis) பாதிப்பின் காரணமாகவும் இதயத்துடிப்பு அதிகரிக்கலாம். இதயத்துடிப்பு அதிகரிக்கும்போது கூடவே படபடப்பும் அதிகரிக்கிறதா என்று பார்க்க வேண்டும். ஒருவேளை படபடப்பும் அதிகரிக்கிறது என்றால் இந்தப் பிரச்னையை வேறுவிதமாக அணுக வேண்டியிருக்கும். படபடப்பு இல்லை, இதயத்துடிப்பு மட்டும் அதிகமிருக்கும் நிலையில் அதை வேறு விதமாக அணுக வேண்டியிருக்கும்.

Blood Pressure

முதல் வேலையாக தைராய்டு டெஸ்ட் செய்து அது இருக்கிறதா என உறுதிசெய்யவும். நீங்கள் பெண்ணாக இருந்தால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை சரிபார்க்கவும். ஹீமோகுளோபின் குறைந்தாலும் இதயத்துடிப்பு அதிகரிக்கும். இதயத்துடிப்பு அதிகரிப்பதோடு, படபடப்பு, தலைச்சுற்றல் போன்றவையும் இருந்தால் இசிஜி எடுத்துப் பார்த்து, இதயம் தொடர்பான பாதிப்புகள் இருக்கின்றனவா என்றும் உறுதிசெய்துவிடுவது நல்லது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com