லெதர் அலர்ஜி (Leather Dermatitis)
கைக்கடிகாரப் பட்டை, செருப்பு, ஹேண்ட் பேக்… போன்ற தோல் பொருட்களும் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தக்கூடும். இவர்கள், கைக்கடிகாரங்களில் தோல் பொருட்களுக்குப் பதிலாக உலோகத்தை பயன்படுத்தலாம். காலுக்கு காட்டன் சாக்ஸ் அணிந்துகொண்டு செருப்பு அல்லது ஷூ அணிந்தால் அலர்ஜி தொல்லை இல்லை!
புற ஊதா கதிர் வீச்சு அலர்ஜி (Ultra violet Dermatitis)
சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். இதனால், மேல் புறத்தோலில் கொப்புளம், நிறம் மங்குதல், அரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். பவுடர், க்ரீம், மஞ்சள் போன்ற காஸ்மெட்டிக் பொருட்கள்… இந்த புற ஊதா கதிர்களை அதிகளவில் உட்கிரகிக்கும் தன்மை கொண்டவை. எனவே, அலர்ஜி உள்ளவர்கள் மேற்கண்ட பொருட்களை தவிர்த்துவிடுதல் நல்லது.
புற ஊதா கதிர் வீச்சால் ஏற்படும் அலர்ஜியை கவனிக்காமல் விட்டுவிட்டால், நாளடைவில் தோல் சுருங்கி விரைவில் வயோதிகத் தோற்றத்தை ஏற்படுத்திவிடும். சன் ஸ்க்ரீன் லோஷன் போடுவதன் மூலம் இந்த அலர்ஜியை தடுக்கலாம். ஆனால், சன் ஸ்க்ரீன் அளவு எஸ்.பி.எஃப்-15க்கு மேல் இருக்க வேண்டும். பொதுவாக சன் ஸ்க்ரீன் லோஷன் 20 நிமிடத்துக்கு பிறகுதான் வேலை செய்யும். எனவே, வெயிலில் செல்வதற்கு 20 நிமிடத்துக்கு முன்பே லோஷனை தடவிக் கொள்ள வேண்டும்.
யுர்டிகேரியா (Urticaria)
தோலில் அங்கங்கே சிவப்பு நிற திட்டுக்களாக தோன்றும் ஒரு வகையான அலர்ஜி இது. சூரிய ஒளி படுகிற இடங்களில் எல்லாம் சிலருக்கு சிவப்பு நிற திட்டுக்கள் தோன்றும். உள்ளாடை நாடாவை இறுக்கிக் கட்டும் பகுதியில் தொடர்ந்து வியர்வை பட்டுக் கொண்டே இருப்பதாலும் இதுபோன்ற பாதிப்பு வரும். கம்பளிப் பூச்சி, மரவட்டை போன்ற பூச்சிகள் நம் மீது ஊர்ந்து செல்ல நேரிட்டாலோ, நாய் – பூனை போன்ற செல்லப் பிராணிகளின் சுவாசம் நம் தோல் மீது படுவதாலும்கூட அர்டிகேரியா பாதிப்பு வரும். இப்படி ஏதேனும் பிரச்னை இருந்தால் உடனடியாக டாக்டரைப் பார்க்க வேண்டியது அவசியம்.
உணவு அலர்ஜி (Food Dermatitis)
சிலருக்கு சாப்பிட்டு முடித்ததும் உடம்பில் தடிப்பு, அரிப்பு ஏற்படும். அமிலம் மற்றும் காரத்தன்மை அதிகம் உள்ள காய்கறிகள் – பழங்களைச் சாப்பிடுவதாலும், ரசாயனப் பொருட்கள் கலந்த ஜூஸ், குறிப்பிட்ட சில பழங்களின் கொட்டைச் சாறு போன்றவற்றை அருந்துவதாலும் அலர்ஜி ஏற்படும். சாதாரண புளிக் கரைசல் சருமத்தில் படுவதாலும்கூட அலர்ஜி ஏற்படும். எனவே ஒவ்வாத பொருட்களை கையுறை அணிந்து கொண்டு தொடுவது நல்லது” எல்லாவற்றையும் விவரித்து முடித்த டாக்டர் செந்தமிழ்செல்வி, நிறைவாக,
”இன்றையச் சூழலில், உணவுப் பொருட்களிலும் அழகுக்காகப் பயன்படுத்தப்படும் பொருட்களிலும் அதிகளவில், ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. நம் உடம்பு ஏற்றுக்கொள்ளும் பொருட்களை முதலிலேயே தெளிவாகக் கண்டறிந்து பயன்படுத்தினால் எந்த அலர்ஜியும் அலறியடித்து ஓடிவிடும்! இதுதான் அனைவரும் மனதில் முதலில் ஏற்றிக் கொள்ள வேண்டிய முதல் பாடம்” என்றார் அக்கறை பொங்க!