சாப்பிட்டவுடன் உடனடியாக நடைப்பயிற்சி மேற்கொள்ளக்கூடாது. 10 நிமிடங்கள் கழித்து, 10-15 நிமிடங்கள் மெதுவாக நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.
ஒரே வகை உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுவது போரடித்தால், விதவிதமான டிஷ் செய்து சாப்பிடுங்கள். ஒரு வாரத்துக்கு, என்னென்ன டிஷ் எப்போது செய்வது என்பதை, ஒரு அட்டவணையாகப் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். அதன்படி, முடிந்தவரை பின்பற்றுங்கள். சர்க்கரை நோய் என்று முடங்கிவிடாமல் ஆரோக்கியமான உணவுகளைச் சுவைக்கத் தொடங்குங்கள். தினமும், 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வது, சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும்.
குறிப்பு: சர்க்கரை நோய் இல்லாதவர்களும் இந்த அட்டவணையைக் கடைப்பிடிக்கலாம்.
ஜி.பூஜா, விருதுநகர்.
“எனக்கு, எந்த விஷயத்திலும், முதலில், நேர்மறை எண்ணங்கள் வருவது இல்லை. அப்படி நடந்துவிடுமோ. இப்படி ஆகிவிடுமோ எனத் தொடர்ந்து, எதிர்மறை எண்ணங்களே பெரும்பாலும் வருகின்றன. நான் என்ன செய்வது?”
டாக்டர் பி.பி. கண்ணன்,
மனநல மருத்துவர், சென்னை.
“பொதுவாக எதிர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது என்று சொல்பவர்களை பாசிட்டிவாகச் சிந்தியுங்கள் என்று சொல்வதுண்டு. ஆனால், பாசிட்டிவ் எண்ணங்களை நினைக்க வேண்டும் என்று நினைத்தும்கூட, உங்களால் முடியவில்லை என்றுதான் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள் என்று, புரிந்துகொள்ள முடிகிறது.
இனி நீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால், இந்த எதிர்மறை எண்ணங்கள் எத்தனை நாட்களாக இருக்கின்றன, இவற்றைத் தவிர்க்க முடிகிறதா, எவ்வளவு நேரம் இந்த எதிர்மறை எண்ணங்கள் உங்களைத் தொந்தரவு செய்கின்றன என்பதைக் கவனித்து, குறித்துக் கொள்ளுங்கள். சிறிது நேரம் மட்டும் வந்துவிட்டு செல்கிறதென்றால், அதை பற்றி கவலைப்படத் தேவை இல்லை. அதிக நேரமாக நெகட்டிவ் எண்ணங்கள் வந்து, உங்களுக்குத் தொல்லை கொடுத்தால், உடனே மருந்துவரை சந்திப்பது அவசியம்.
தொடக்க நிலையில் இருப்பவர்கள், உளவியல் சிகிச்சைகளைத் தவறாமல் எடுத்துக்கொண்டாலே போதும். மத்திய நிலையில் இருப்பவர்கள் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை மருத்துவரின் வழிகாட்டுதலோடு, மாத்திரைகளைச் சாப்பிட்டு, குணமாகலாம். முற்றிய, இறுதி நிலையில் இருப்பவர்கள், இரண்டு ஆண்டுகளாவது மாத்திரைகளைச் சாப்பிட்டு, சிகிச்சையிலும் இருப்பது அவசியம். எந்த காரணங்களுக்காகவும் சிகிச்சையை பாதியில் நிறுத்தக் கூடாது. தொடர்ந்து மாத்திரை சாப்பிடுவதால், பக்க விளைவுகள் வருமோ என்ற பயம் இருக்குமெனில், அதையும் மருத்துவரிடம் கேட்டு ஆலோசனை பெற்றுக் கொள்வதே சரி.”
-பு.விவேக் ஆனந்த்