ஹைப்பர்லிபிடெமீயா (Hyperlipidemia)
ரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பது `ஹைப்பர்லிபிடெமீயா’ எனக் குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில் உள்ளவர்களுக்கு, கொலஸ்ட்ரால் அளவு 200 மி.கி-க்கு மேலே இருக்கும். கொலஸ்ட்ரால், ட்ரைகிளைசரைடு மற்றும் கொழுப்புச்சத்து அதிகளவு சேரும்போது, இதயப் பகுதிகளின் மேலே படிவதுடன், ரத்த ஓட்டத்திலும் சிக்கல் ஏற்படும்.
இதன் தொடர்ச்சியாக மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற பிரச்னைகள் ஏற்படும் என்பதால், அடிக்கடி கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். நல்ல கொழுப்புச்சத்தின் அளவு, 40 மி.கி-க்கு மேல் இருக்க வேண்டும். கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு 100 மி.கி-க்குக் குறைவாக இருக்க வேண்டும். ட்ரைகிளைசரைடு அளவு 150 மி.கி-க்குக் குறைவாக இருக்க வேண்டும். மொத்தமாக 200 மி.கி வரை இருக்கலாம்.

லிப்பிட் புரொஃபைல் (Lipid Profile)
கொலஸ்ட்ராலின் அளவு வயதைப் பொறுத்தும், பாலினத்தைப் பொறுத்தும், உடல் எடையைப் பொறுத்தும் மாறுபடும். எனவே, குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒரு முறையாவது கொலஸ்ட்ரால் அளவைப் பரிசோதிக்க வேண்டும். கொலஸ்ட்ரால் அளவைப் பரிசோதிக்கும் டெஸ்ட்டின் பெயர், `லிப்பிட் புரொஃபைல்’ (Lipid Profile). ஏற்கெனவே இதயப் பிரச்னை, சர்க்கரை நோய் போன்ற பாதிப்பு உள்ளவர்கள், ஆண்டுக்கு மூன்று முறை இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இதில், மொத்த கொலஸ்ட்ரால் அளவு, கெட்ட கொலஸ்ட்ரால் அளவு, நல்ல கொலஸ்ட்ரால் அளவு மற்றும் ட்ரைகிளைசரைடு அளவுகள் பரிசோதிக்கப்படும்.
35 வயதைத் தாண்டியவர்கள், ஆண்டுக்கொருமுறை இந்தப் பரிசோதனையைச் செய்ய வேண்டும். யாருக்குக் கொலஸ்ட்ரால் பிரச்னை இருக்கிறதோ, அவரது குடும்பத்திலுள்ளவர்கள் அவ்வப்போது இந்த டெஸ்ட்டைச் செய்ய வேண்டும். மற்ற இடங்களைக் காட்டிலும், இடுப்பில் கொலஸ்ட்ரால் சேர்வதே அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், தொப்பை இருப்பவர்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது.
உடல் பருமனாக உள்ளவர்கள், மது மற்றும் புகைப்பழக்கம் உள்ளவர்கள், சிறுநீரகத் தொற்று, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் இந்தப் பரிசோதனையைக் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும். தேவையான அளவு உடலுழைப்பு இல்லாதவர்கள், அன்றாடம் சரியாக உடற்பயிற்சி செய்யாதவர்கள், சரியான உணவுப்பழக்கம் இல்லாதவர்கள் எனச் சீரான வாழ்வியல் முறையைப் பின்பற்றாதவர்கள் கண்டிப்பாக டெஸ்ட் செய்துகொள்ள வேண்டும்.

கொலஸ்ட்ரால் அளவில் ஏற்ற இறக்கங்கள் ஏன்?
* உணவுப் பழக்கம் – நிறைவுற்ற கொழுப்புச்சத்து, ட்ரான்ஸ் ஃபேட், கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வது கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கும்.
* அதிக உடல் எடையும் உடலுக்குத் தேவையான உழைப்பைக் கொடுக்காததும் கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கும்.
* பெண்களுக்கு மெனோபாஸ் நேரத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கக்கூடும்.

கொழுப்புச்சத்து உட்கொள்வதில் கவனம்!
இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், உடல் பருமனாக இருப்பவர்கள், ஏற்கெனவே மாரடைப்பு வந்தவர்கள், வயிற்றுப் பகுதியில் அதிகளவு கொழுப்பு உள்ளவர்கள், அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை உட்கொண்டால் அதன் அளவிலும் தரத்திலும் கவனமாக இருக்க வேண்டும். உணவில் எவ்வளவு நல்ல கொலஸ்ட்ரால், கெட்ட கொலஸ்ட்ரால் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொண்டு சாப்பிட்டாலே போதும்.