Doctor Vikatan: எனக்கு சிறுநீரைக் கட்டுப்படுத்துவது சிரமமாக இருக்கிறது. இது நோயின் அறிகுறியா? நான் தினமும் வெறும் வயிற்றில் ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்கிறேன். ஒரு லிட்டர் தண்ணீரை ஒரே நேரத்தில் குடிப்பது சரியானதா?
-Siva Kumar, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி
சிறுநீரகப் பையின் முழுமையான கொள்ளளவு என்பது வயதுக்கேற்ப மாறுபடும். அதில் மாறுதல் ஏற்படும்போது சிலருக்கு சிறுநீரைத் தக்கவைத்துக்கொள்வது சிரமமாகலாம். இதை சிறுநீரை கட்டுப்படுத்த இயலாத நிலை (Urinary incontinence) என்று சொல்வோம்.
40 வயதைக் கடந்த சில ஆண்களுக்கும், கர்ப்பப்பை இறக்க பாதிப்பு போன்று கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகள் உள்ள சில பெண்களுக்கும் இந்தப் பிரச்னை வரலாம். நரம்பு தொடர்பான பிரச்னைகள் இருந்தாலும் இந்த பாதிப்பு வரலாம்.
மருத்துவரை அணுகி பெரிய பாதிப்பு இல்லை என உறுதியானால், சாதாரண பயிற்சிகளின் மூலமே இந்தப் பிரச்னையை சரிசெய்ய முடியும். சிலருக்கு சிறுநீர் கழித்த பிறகும், சிறுநீர்ப் பையில் இன்னும் சிறிது சிறுநீர் மிச்சமிருப்பது போன்ற உணர்வு ஏற்படலாம். சிறுநீர்ப்பை தொடர்பான வேறு பிரச்னைகள் இருக்கின்றனவா என்பதையும் செக் செய்ய வேண்டும்.