Doctor Vikatan: என் வயது 35. சமையல், பாத்திரம் துலக்குவது உள்ளிட்ட வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் நான்தான் செய்கிறேன். சமீப காலமாக எனக்கு கைகளில் தோல் உரிவது, வறண்டுபோவது, அரிப்பு, எரிச்சல் போன்ற பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. வேலை செய்யாமலிருந்தால் இந்த அறிகுறிகள் குறைகின்றன. இதற்கு என்ன தீர்வு?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா

இந்தப் பிரச்னையை எதிர்கொள்ளாத அம்மாக்கள், பாட்டிகளே இருக்க மாட்டார்கள். இந்தப் பிரச்னைக்கு ‘ஹேண்ட் எக்ஸீமா’ (Hand eczema) அல்லது ‘ஹவுஸ்வொயிஃப் டெர்மடைட்டிஸ்’ (Housewife dermatitis) என்று சொல்வோம். தண்ணீரில் அதிக நேரம் கைகளைப் பயன்படுத்தி வேலை செய்கிறவர்களுக்கு இந்தப் பிரச்னை பரவலாக வரும். அதாவது சமையல் கலைஞர்கள், ஹேர் டிரெஸ்ஸர்கள், கட்டுமானப் பணியாளர்கள் போன்றோருக்கு அடிக்கடி இந்தப் பிரச்னை பாதிக்கும்.
கைகள் வறண்டு, வெடித்துப்போய், சிவந்து, அரிப்புடனும் சீழ்க்கட்டிகளுடனும் காணப்படும். நகக் கண்களில் இன்ஃபெக்ஷன் ஏற்படும். இதை ஒரு பெரிய பிரச்னையாக நினைத்து, மருத்துவரிடம் சிகிச்சைக்கு வரும் பெண்கள் மிகக் குறைவு. பாதிப்பு தீவிரமான நிலையில் வருவோர்தான் அதிகம்.

இந்தப் பிரச்னைக்கு உள்புற மற்றும் வெளிப்புற காரணங்கள் என இரண்டும் உண்டு. வெளிப்புற காரணங்கள் என்று பார்க்கும்போது பாத்திரம் தேய்க்கப் பயன்படுத்தும் சோப், லிக்விட், துணி துவைக்கும் டிடெர்ஜென்ட், வீடு துடைக்கப் பயன்படுத்தும் கெமிக்கல் போன்றவை மட்டுமன்றி, சமையலுக்குப் பயன்படுத்தும் இஞ்சி, பூண்டு, புளி போன்றவற்றைக் கையாள்வதுகூட காரணமாகலாம்.
இந்தப் பிரச்னை வராமல் தடுக்க பிரச்னையைத தூண்டும் பொருள்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும். வீட்டு வேலைகள் பார்க்கும்போது கைகளுக்கு கிளவுஸ் அணிந்துகொள்ளலாம். அன்றாட சமையலுக்கு புளி, பூண்டு போன்றவற்றை உபயோகிப்பதைத் தவிர்க்க முடியாது. எனவே அவற்றைக் கையாளும்போது நேரடியாக கைகள் படாமல் ஸ்பூன் உபயோகிக்கலாம் அல்லது வேறு யாரின் உதவியையாவது நாடலாம்.
தினமும் கைகளுக்கு மாய்ஸ்ச்சரைசர் உபயோகிக்கவும். இப்படியெல்லாம் செய்தபிறகும் பிரச்னை வருகிறது என்றால் சரும மருத்துவரை அணுகுங்கள். உங்கள் பிரச்னையின் தீவிரத்தைப் பொறுத்து மருந்து, மாத்திரைகளோ, வெளிப்பூச்சுக்கான மருந்துகளோ பரிந்துரைப்பார். போட்டோதெரபிகூட பலனிக்கலாம். மருத்துவரை நேரில் அணுகினால்தான் உங்கள் பாதிப்பின் தீவிரத்துக்கேற்ற சரியான சிகிச்சையை அவரால் பரிந்துரைக்க முடியும். வீட்டு வேலை செய்கிற எல்லாப் பெண்களுக்கும் இது சகஜம்தான் என்ற எண்ணத்தில் இந்த அவதியோடு வாழ வேண்டிய அவசியமில்லை.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.