Doctor Vikatan: வீட்டில் பாசிட்டிவ், மருத்துவமனையில் நெகட்டிவ்: பிரெக்னன்சி கிட் பொய் சொல்லுமா?

Share

Doctor Vikatan: என் வயது 28. திருமணமாகி ஒரு வருடமான நிலையில், பீரியட்ஸ் தள்ளிப்போனது. மெடிக்கல் ஷாப்பில் பிரெக்னன்சி கிட் வாங்கி வீட்டிலேயே டெஸ்ட் செய்து பார்த்தேன். அதில் இரண்டு கோடுகள் வந்ததை அடுத்து நான் கர்ப்பம் என தெரிய வந்தது. மகிழ்ச்சியோடு மருத்துவரை சந்திக்கப் போனேன். அங்கே அவர் செய்த பரிசோதனையில் கர்ப்பம் இல்லை என வந்தது. இதை எப்படிப் புரிந்துகொள்வது…. பிரெக்னன்சி கிட் பொய் சொல்லுமா அல்லது வேறு என்ன நடந்திருக்கும்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்.

மகளிர்நலம் & குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ் | சென்னை.

நீங்கள் குறிப்பிட்டுள்ள பிரச்னையை ‘பயோகெமிக்கல் பிரெக்னன்சி’ அல்லது ‘கெமிக்கல் பிரெக்னன்சி’ என சொல்வோம். சிலருக்கு பீரியட்ஸ் தள்ளிப்போயிருக்கும். உங்களைப் போலவே அவர்கள் பிரெக்னன்சி கிட் வைத்து வீட்டிலேயே  டெஸ்ட் செய்து பார்த்திருப்பார்கள். அதில் இரண்டு கோடுகள் வந்திருக்கும். அதைவைத்து கர்ப்பமானதாக நினைத்து மிகவும் சந்தோஷப்படுவார்கள். 

அடுத்தகட்டமாக மருத்துவரைப் பார்க்க வருவார்கள். மருத்துவர் அந்தப் பெண் கர்ப்பமானதை மீண்டும் உறுதிசெய்ய பிளட் டெஸ்ட் செய்வார். அதாவது பிளட் பீட்டா ஹெச்.சி.ஜி ஹார்மோன் டெஸ்ட் செய்து அதை உறுதிசெய்வார். இந்த பீட்டா ஹெச்.சி.ஜி அளவானது 100-க்கு மேல் இருந்தால்தான் அந்தப் பெண் கர்ப்பம் என்பதை மருத்துவர்கள் உறுதிசெய்வோம்.

ரத்தப் பரிசோதனை

அதுவே  பீட்டா ஹெச்.சி.ஜி அளவானது 100-க்கு கீழ் இருந்தால் அதை கர்ப்பம் என உறுதிசெய்ய முடியாது. ஒருவேளை   பீட்டா ஹெச்.சி.ஜி அளவானது 80-90 என்ற அளவில் இருந்தால், இரண்டு நாள்கள் கழித்து மீண்டும் அந்த டெஸ்ட்டை  செய்துபார்க்கச்  சொல்வோம். சிலருக்கு 100- 110 என பார்டர் அளவில் இந்த  பீட்டா ஹெச்.சி.ஜி இருக்கும்.  எனவே இரண்டு, மூன்று நாள்கள் காத்திருந்து மீண்டும் டெஸ்ட் செய்யும்போது, பெரும்பாலும் அதன் அளவானது இரண்டு மடங்காகி இருக்கும். 

இப்படி  பீட்டா ஹெச்.சி.ஜி அளவு இரண்டு மடங்காக ஆரம்பித்தாலே, அந்தக் கருவானது நன்றாக வளர ஆரம்பித்துவிட்டதாக அர்த்தம். அதுவே  அடுத்தடுத்த நாள்களில் அந்த அளவானது இன்னும் குறையத் தொடங்கினால், அதை நாம்  ‘பயோகெமிக்கல் பிரெக்னன்சி’ என்று சொல்வோம். இந்தப் பிரச்னையில் கரு உருவாகியிருக்கும். ஆனால் ஹார்மோன் பிரச்னை, சிறுநீரகப் பகுதியின் அசாதாரண நிலை உள்ளிட்ட ஏதோ காரணங்களால் கரு வளர்வதில் சிக்கல் இருக்கும்.

கருத்தரிப்பு

பிரெக்னன்சி கிட்டில் செய்துபார்த்த சிறுநீர்ப் பரிசோதனையில் கர்ப்பம் உறுதியானதைக் காட்டியிருக்கும். ஆனால் அடுத்து அல்ட்ராசவுண்டு ஸ்கேன் செய்வதற்குள்ளேயே அந்தக் கரு கலைந்திருக்கும். இதை நாம் சாதாரண கர்ப்பமாகக் கருத முடியாது. அதாவது சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு கருத்தரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் ஹார்மோன் பிரச்னை காரணமாக அந்தக் கரு தொடர்ந்து  வளர்வதில் சிக்கல் இருக்கிறது என புரிந்துகொள்ள வேண்டும்.

இவர்களுக்கு ஹார்மோன் சிகிச்சை கொடுத்து, இந்தப் பிரச்னையை சரிசெய்ய முடியும். அவர்களால் சீக்கிரமே கருத்தரிக்க முடியும். எனவே   ‘பயோகெமிக்கல் பிரெக்னன்சி’ குறித்து பயப்படத் தேவையில்லை. தாமதிக்காமல் மகப்பேறு மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com