Doctor Vikatan: என் மகனுக்கு நான்கரை வயது ஆகிறது. எல்கேஜி படிக்கிறான். தினமும் காலை உணவாக இட்லி, தோசை, சாதம் என ஏதாவது ஒன்றை காலை 9 மணிக்கு கொடுக்கிறோம். ஆனால் பள்ளிக்குச் சென்ற சிறிது நேரத்தில் வாந்தி எடுக்கிறான். ஆறு நாள்கள் பள்ளிக்குச் சென்றதில் நான்கு நாள்கள் இது போல் நடந்திருக்கிறது. இந்தப் பிரச்னையை எப்படிச் சரி செய்வது… மதியம் மற்றும் இரவு நேரத்தில் இப்படி நடப்பதில்லை. காலை மற்றும் இரவு நேரத்தில் பால் குடிக்கிறான். வாந்தி எடுப்பதால் காலை உணவையே மறுக்கிறான்… இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?
-SELVAKUMAR, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்
பெரும்பாலும் குழந்தைகளை காலையில் தூக்கத்தில் இருந்து எழுப்பி, பள்ளிக்குத் தயார் செய்து அனுப்புவது பெற்றோருக்குப் பெரிய சவாலாகவே இருக்கும். குழந்தையை பாதித் தூக்கத்தில் எழுப்பி, அவசரம் அவசரமாக குடிப்பதற்கு பாலோ, வேறு பானங்களோ கொடுப்பார்கள். குழந்தைக்கு அது முழுமையாக செரித்திருக்காது. அதற்குள் பள்ளிக்கு நேரமாகிவிடும் என்று காலை உணவாக எதையாவது திணிப்பார்கள். அந்தக் குழந்தை பிடிக்கிறதோ, இல்லையோ, வற்புறுத்தலுக்காக விழுங்கிவிட்டுச் செல்லும்.