Doctor Vikatan: சாலைகளில் செல்லும்போது சிலர் வலிப்பு வந்து துடிப்பதைப் பார்க்கிறோம். அப்படிப்பட்ட தருணங்களில் அவர்களுக்கு என்ன மாதிரியான முதலுதவி செய்ய வேண்டும்? வலிப்பு வந்தவரின் கையில் சாவிக்கொத்து கொடுப்பது சரியானதா?
பதிலளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் ப்ரித்திகா சாரி.
வலிப்பு வந்த நபர், உயரமான இடத்தில் உட்கார்ந்திருந்தால், முதலில் அவரை பாதுகாப்பாக கீழே இறக்கிவிட வேண்டும். உடம்பு வெட்டும் நிலையில், அவரது தலைக்குக் கீழே மென்மையான பொருள் எதையாவது வைக்க வேண்டும். உதாரணத்துக்கு நம்முடைய துப்பட்டா, ஹேண்ட்பேக் என மென்மையான ஒன்றை வைக்கலாம்.
வலிப்பு வந்த நபரை பக்கவாட்டில் திருப்பிவிட வேண்டும். இதற்கு `ரெக்கவரி பொசிஷன்’ என்று பெயர். வலிப்பு வந்த நபருக்கு வாயிலிருந்து அதிகப்படியான உமிழ்நீர் வெளியேறும். அது அந்த நபரின் சுவாசக்குழாய்க்குள் போய்விடக்கூடாது என்பதே காரணம். எனவே தலையைத் திருப்பிவிட்டு, உடலை பக்கவாட்டில் திருப்பிவிட்டு, ஒரு காலையும் மடித்துவிடுவதன் மூலம் இதயத்துக்கு பிரஷர் இல்லாமலிருக்கும். வாயிலிருந்து வரும் உமிழ்நீரும் கீழே வெளியேறிவிடும்.