என் வயது 58. எனக்கு மெனோபாஸுக்கான சில அறிகுறிகள் தென்படுகின்றன. வெஜைனா பகுதியில் வறட்சியும், எரிச்சலும் இருப்பதுடன், தாம்பத்திய உறவு கொள்வதிலும் அசௌகர்யமாக உணர்கிறேன். ஈஸ்ட்ரோஜென் குறைவுதான் காரணம் என்று நினைக்கிறேன். எனக்கு ஹெச்ஆர்டி சிகிச்சை எடுத்துக் கொள்ள விருப்பமில்லை. வேறு ஏதேனும் மாற்று வழிகள், தீர்வுகள் உண்டா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, பேராசிரியரும் மகப்பேறு மருத்துவருமான ஹெப்ஸிபா கிருபாமணி.
மெனோபாஸுக்கான அறிகுறிகள் தென்படுவதாகக் குறிப்பிட்டுள்ள நீங்கள், அவை எந்த மாதிரியான அறிகுறிகள் என்று தெளிவாகக் குறிப்பிடவில்லை.

வெஜைனா பகுதியில் ஏற்பட்ட வறட்சி, எரிச்சல் மற்றும் தாம்பத்திய உறவின்போதான அசௌகர்யத்துக்கு, நீங்கள் லூப்ரிகன்ட்ஸ் எனப்படும் வழுவழுப்புத்தன்மையைக் கொடுக்கும் ஆயின்மென்ட்டுகளை உபயோகித்தாலே போதும். அதில் ஹார்மோன் இருக்காது.
இந்த ஆயின்மென்ட்டுகள் மருந்துக் கடைகளில் மருத்துவரின் ப்ரிஸ்கிரிப்ஷன் இல்லாமலேயே கிடைக்கக்கூடியவை. அவற்றை உபயோகிக்கலாம்.
ஹெச்ஆர்டி எனப்படும் ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி மெனோபாஸை எதிர்கொள்கிற எல்லாப் பெண்களுக்கும் பரிந்துரைக்கப்படுவதில்லை. மெனோபாஸ் அறிகுறிகள் என்பவை ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.
அந்த அறிகுறிகளையும் அவற்றின் தீவிரத்தையும் பொறுத்து சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு ஹெச்ஆர்டி தேவையா என்பதை மருத்துவர் முடிவு செய்வார். அது உங்களுக்கு ஏற்றுக்கொள்ளுமா என்பதையெல்லாம் பார்த்துதான் மருத்துவர் பரிந்துரைப்பார். எனவே ஹெச்ஆர்டி குறித்த பயம் உங்களுக்குத் தேவையில்லை.

நீங்கள் புரிந்துகொண்டதுபோல வெஜைனா வறட்சி என்பது ஈஸ்ட்ரோஜென் குறைபாட்டின் காரணமாக ஏற்படுவதுதான். நீங்களாக ஆயின்மென்ட் வாங்கிப் பயன்படுத்துவதில் தயக்கம் இருந்தால் மகப்பேறு மருத்துவரை அணுகுங்கள்.
அவர் உங்களுக்கு ஈஸ்ட்ரோஜென் க்ரீம் பரிந்துரைப்பார். ஒரு வாரத்துக்கு அதை உபயோகிக்கலாம். அதன் பிறகு வாரம் இருமுறை என, 8 முதல் 12 வாரங்களுக்குப் பயன்படுத்தலாம். மேலோட்டமாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் அறிகுறிகளை வைத்து உங்களுக்கு முழுமையான பதிலைக் கொடுக்க முடியாது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.