Doctor Vikatan: எனக்கு முகம் மற்றும் கைகளில் கரும்புள்ளிகள் வருகின்றன. உடல் முழுவதும் அரிப்பும் இருக்கிறது. நீரிழிவுநோயும் இல்லை. இது என்ன பிரச்னை…. இதற்கு என்ன தீர்வு?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா

கேள்வியில் உங்கள் வயது, உங்கள் வேலையின் தன்மை, தினமும் சூரிய வெளிச்சத்தில் செலவிடும் நேரம், வேறு ஏதேனும் உடல்நல பிரச்னைகளுக்கு மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறீர்களா என எந்தத் தகவலும் இல்லை. எனவே நீங்கள் குறிப்பிட்டுள்ள பொதுவான அறிகுறிகளை வைத்து இதற்கான பதிலைச் சொல்கிறேன்.
முகம் மற்றும் கைகளில் கரும்புள்ளிகள் மற்றும் உடல் முழுவதும் அரிப்பு என்று பார்க்கும்போது இது ‘பாலிமார்ஃபிக் லைட் எரப்ஷன்’ (Polymorphic light eruption) என்ற பிரச்னையாக இருக்கலாம் என தோன்றுகிறது. இந்தப் பிரச்னை பாதிக்கும்நிலையில்தான் சருமத்தில் வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு நிறங்களில் அரிப்புடன் கூடிய புள்ளிகள் வரக்கூடும்.
இந்தப் பிரச்னைக்கான முதலும் முக்கியமுமான தீர்வு, வெயில் படுவதைத் தவிர்ப்பது. அதிலும் குறிப்பாக வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும் காலை 9 மணி முதல் மாலை 3 வரை தவிர்க்க வேண்டியது மிக முக்கியம். அது மட்டும் போதாது. சூரிய ஒளியின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான மற்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
நீரிழிவு இருந்தால்தான் பெரும்பாலும் இப்படி சருமத்தில் கரும்படலம் வரும். உங்களுக்கு நீரிழிவு இல்லை என குறிப்பிட்டிருப்பதால் பிரச்னையில்லை.

குளிக்கும்போது சிலர் நார் அல்லது லூஃபா உபயோகித்துத் தேய்த்துக் குளிப்பார்கள். அதன் விளைவாலும் சருமத்தில் நிற மாற்றம் வர வாய்ப்புகள் அதிகம்.
எனவே கரும்புள்ளிகளுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கக்கூடும். உங்களுக்கு பாதிப்பு தொடரும்பட்சத்தில் சரும மருத்துவரை நேரில் சந்தித்து ஆலோசனை பெறுவதுதான் சரியானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.