Doctor Vikatan: என் வயது 40. பொடுகுத் தொல்லை இருப்பதால் தினமும் பொடுகு நீக்கும் ஆன்டி டாண்டிராஃப் ஷாம்பூ உபயோகிக்கிறேன். ஆனால் முடி உதிர்வு அதிகமாக இருக்கிறது. ஆன்டி டான்டிராஃப் ஷாம்பூவை தினமும் உபயோகிக்கலாமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக்.
பொடுகு பிரச்னையை ஷாம்பூ மூலம் குணப்படுத்திவிடலாம் என நினைப்பதே தவறானது. நம் மண்டைப் பகுதியின் டெர்மிஸ் எனப்படும் மேலடுக்கு, எபிடெர்மிஸ் எனப்படும் கீழடுக்கு என எதில் வேண்டுமானாலும் இன்ஃபெக்ஷன் இருக்கலாம். இதன் காரணமாக பொடுகு வரலாம். நீங்கள் உபயோகிக்கிற ஷாம்பூ, டெர்மிஸ் அடுக்கு வரை ஊடுருவிச் செல்லாது.
ஆன்ட்டி டாண்டிராஃப் ஷாம்பூ என்று இல்லை, எந்த ஷாம்பூவை உபயோகித்து தலைக்கு குளித்தாலும் தலையில் அரிப்பு குறைவதையோ நீங்குவதையோ உணரலாம். வெள்ளை வெள்ளையாக செதில் செதிலாக உதிர்வது, தினமும் ஷாம்பூ உபயோகித்து தலைக்கு குளிக்கும்போது மறைவதை உணரலாம். அப்படி இருக்கையில் ஆன்டி டாண்டிராஃப் ஷாம்பூ எதற்கு என்று யோசியுங்கள்.