Doctor Vikatan: பெற்றோருக்கு சர்க்கரைநோய் இருந்தால் பிள்ளைகளுக்கும் அவசியம் வருமா?

Share

Doctor Vikatan: என் வயது 48. பெற்றோருக்கு நீரிழிவுநோய் இருக்கிறது. எனக்கும் அது தொடர வாய்ப்பு உண்டா…. நான் எப்போதிலிருந்து நீரிழிவுக்கான சோதனையைச் செய்ய வேண்டும்?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம்.

நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம் | சென்னை

பொதுவாகவே இந்தியர்களுக்கு சர்க்கரைநோய் வரும் தன்மை அதிகம். முன்பெல்லாம் 40- 45 வயதுக்குப் பிறகு சர்க்கரைநோய் இருக்கிறதா என்பதற்கான டெஸ்ட் செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். இப்போது 30 வயதை எட்டியதுமே சர்க்கரைநோய்க்கான டெஸ்ட் செய்யச் சொல்கிறோம்.

ஒருகாலத்தில் மனிதர்கள் வேட்டையாடி, அதில் கிடைத்த உணவுகளைச் சாப்பிட்டு வாழ்ந்தனர். அளவுக்கதிகமாகச் சாப்பிடுவார்கள். அளவுக்கதிகமான அந்த உணவு கொழுப்பாக உடலில் சேரும். கொழுப்பாகச் சேரும் அந்தத் தன்மை இன்றளவும் நம் மரபணுக்களில் இருக்கிறது.

நம்மில் பலரும் பசித்துச் சாப்பிடுவதில்லை. நேரத்துக்குச் சாப்பிடுகிறோம். அப்படிச் சாப்பிடுவதால் தேவைக்கு அதிகமான உணவானது கொழுப்பாகப் போய் ஸ்டோர் செய்யப்படுகிறது.

உணவுப் பழக்கம்

அதனால் நமக்கு சர்க்கரைநோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம். அதனால்தான் 30 ப்ளஸ்ஸிலேயே சர்க்கரைநோய்க்கான பரிசோதனை செய்யச் சொல்கிறோம்.

பெற்றோர் இருவரில் யாரேனும் ஒருவருக்கு சர்க்கரைநோய் இருந்தால் பிள்ளைகளுக்கும் அந்த நோய் பாதிக்க 60 சதவிகிதம் வாய்ப்பு உண்டு. பெற்றோர் இருவருக்குமே சர்க்கரைநோய் இருந்தால் அந்த வாய்ப்பு 90 சதவிகிதமாக அதிகரிக்கும்.

நம் வாழ்க்கைமுறையும் சர்க்கரைநோய் வருவதற்கான காரணங்களில் பிரதானமாக இருக்கிறது. உடலியக்கமே இல்லாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்வது, இரவில் தாமதமாகவும் அதிகமாகவும் சாப்பிடுவது, காலை உணவைத் தவிர்ப்பது, இரவில் கண்விழித்திருப்பது என நம் உடலியல் கடிகார சுழற்சியே மாறியிருக்கிறது.

இயற்கையோடு இணைந்த வாழ்க்கைக்குப் பழகும்போது சர்க்கரைநோய் உள்ளிட்ட பல பிரச்னைகளை வரவிடாமல் தடுக்க முடியும். ஸ்ட்ரெஸ்ஸும் மிக முக்கிய காரணம்.

நீரிழிவு

ஏற்கெனவே நம் மரபணுக்களில் நீரிழிவுநோய்க்கான தன்மை இருக்கும்போது மேற்குறிப்பிட்ட வாழ்வியல் மாற்றங்களும் சேரும்போது 30 ப்ளஸ்ஸிலேயே சர்க்கரைநோய் பாதிக்கும் வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. எனவே பெற்றோருக்கு சர்க்கரைநோய் இருந்தால் 30 ப்ளஸ்ஸிலும், வாழ்வியல் மாற்றங்கள் இருப்பதாக உணர்பவர்கள் 40 ப்ளஸ்ஸிலும் நீரிழிவுக்கான பரிசோதனையைச் செய்து பார்ப்பது அவசியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com