Doctor Vikatan: என் மகளுக்கு வயது 26. ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் நாள்களின்போது கடுமையான வயிற்றுவலி மற்றும் இடுப்புவலியால் அவதிப்படுகிறாள். வலி நிவாரண மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறாள். அவளுக்கு இன்னும் திருமணமாகவில்லை. பீரியட்ஸ்கால வலியை மாத்திரைகள் இன்றி, உணவுகள் மற்றும் கைவைத்தியம் மூலம் போக்க முடியுமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவர் யோ. தீபா

பீரியட்ஸ் நாள்களில் ஏற்படும் வலியை இயற்கையான வழிகளிலேயே குணப்படுத்த முடியும். முதலில் அந்த நாள்களில் ஜங்க் உணவுகள் எடுப்பதை அறவே தவிர்க்க வேண்டும். நார்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை சாலடாக செய்து சாப்பிடலாம்.
விதைகள் அதிகமுள்ள பழங்கள் சாப்பிடுவது நல்லது. வைட்டமின் இ அதிகமுள்ள உணவுகள், நட்ஸ், பூசணி விதை, சூரியகாந்தி விதை, ஆளிவிதை போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். இவற்றிலுள்ள செலேனியம, ஒமேகா 3 கொழுப்பு அமிலம் போன்றவை மாதவிடாய் வலியைக் குறைத்து, நம் உடலின் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரான் அளவுகளை சீராக வைத்திருக்கவும் உதவும்.

மாதவிலக்கு நாள்களில் அதிக அளவில் இனிப்பு சேர்த்த உணவுகளைத் தவிர்க்கவும். கேக், சாக்லேட், பிஸ்கட் போன்ற உணவுகள் மாதவிடாய் நாள்களின் வலியை அதிகப்படுத்தும். இந்தத் தலைமுறை பெண்கள் பெரிய பெரிய பார் சாக்லேட்டுகளை சர்வசாதாரணமாகச் சாப்பிடுவதைப் பார்க்க முடிகிறது.
ஃப்ரைடு சிக்கன் போன்ற பொரித்த உணவுகளுடன் ஏரேட்டடு பானங்களைக் குடிப்பதையும் பலர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இவற்றிலுள்ள சர்க்கரைச் சத்தின் காரணமாக ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படுவது மட்டுமன்றி, மாதவிடாய் நாள்களில் வயிற்றுவலி, அடிமுதுகுவலியும் அதிகரிக்கும்.

உப்பு சேர்த்த உணவுகள், பதப்படுத்திய உணவுகள், நூடுல்ஸ், சிப்ஸ் போன்றவை உடலில் நீர்கோப்பதை அதிகரிக்கும். அதன் விளைவாக வலியும் அதிகமாகும். கம்மா லினோலெனிக் அமிலம் (Gamma-linolenic acid) அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிடலாம். இது நட்ஸ், சீட்ஸ், தக்காளி, வெங்காயம், பூண்டு, இஞ்சி உட்பட நம் மசாலா டப்பாவில் உள்ள அத்தனை பொருள்களிலும் இருக்கக்கூடியது.
ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவதில் வைட்டமின் பி6 -க்கு மிக முக்கிய பங்கு உண்டு. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையும்போது மாதவிடாய் நாள்களின் வலி தீவிரமாக இருக்கும். பீரியட்ஸ் வரப்போகிற அறிகுறிகளை உணரத் தொடங்கியதுமே உடலின் நீர்த்தேவையை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். சாத்துக்குடி ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ், மாதுளை ஜூஸ் போன்றவற்றை சர்க்கரை சேர்க்காமல் எடுத்துக்கொள்ளலாம்.

ஒரு டம்ளர் தண்ணீரில் கால் டீஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் சோம்பு, கால் டீஸ்பூன் பட்டைத்தூள், நசுக்கிய இஞ்சி சிறிதளவு, ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கொதிக்கவைக்கவும். இறக்கும்போது சிறிது புதினா சேர்த்து, பிறகு எலுமிச்சைச் சாறு சேர்த்துக் குடிக்கும்போது உடனடியாக வலி குறைவதை உணரலாம். இதை மாதவிலக்கு நாள்களில் மட்டுமன்றி தினமுமே சிறிதளவு குடித்துவருவதும் நல்லதுதான்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.