Doctor Vikatan: எனக்கு குழந்தை பிறந்து 3 மாதங்கள் ஆகின்றன. பிரசவம் முடிந்து வீட்டுக்கு வருவதற்கு முன்பே குழந்தைக்கு கேட்கும் திறன் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்கிறாள் என் தோழி. என் குழந்தைக்கு அப்படி எந்த டெஸ்ட்டும் செய்யவில்லை. ஆரோக்கியமாகப் பிறக்கும் குழந்தைக்கும் இந்த டெஸ்ட் அவசியமா? இது குழந்தைக்கு வலியை ஏற்படுத்தாதா?
பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த குழந்தைகள்நல மருத்துவர் எஸ்.ஸ்ரீநிவாஸ்.
பிறக்கும் குழந்தைகள் அனைவருக்குமே கேட்கும் திறன் பரிசோதிக்கப்பட வேண்டும். குழந்தை பிறந்து, மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்வதற்கு முன், குழந்தை பிறந்து ஒரு மாதத்துக்குள் இந்த டெஸ்ட் செய்யப்பட வேண்டும். ரிஸ்க் பிரிவில் உள்ள குழந்தைகள் என்றில்லாமல், பிறக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் இந்த டெஸ்ட் அவசியம்.
`ஓஏஈ’ (Otoacoustic Emissions (OAE) எனப்படும் இந்தப் பரிசோதனையில், குழந்தையின் காதின் உள்புறமான காக்ளியா எனும் பகுதி சரியாக இயங்குகிறதா என்று கண்டறியப்படும். காதின் உள்புறத்தில் ரோமத் திசுக்கள் இருக்கும். ஒலியைக் கேட்கும்போது அவற்றில் அதிர்வு ஏற்படும். அந்த அதிர்வானது நடுக்காதில் எக்கோ போன்று உணரச் செய்யும். அதைத்தான் `ஓஏஈ’ டெஸ்ட் அளவிடும். அதை வைத்து குழந்தைக்குக் கேட்கும் திறன் நார்மலாக உள்ளதா அல்லது அதில் ஏதேனும் பிரச்னை உள்ளதா என்பது உறுதிசெய்யப்படும்.