சரியான நேரத்துக்குச் சாப்பிடாதவர்களுக்கும் பித்தப்பை கற்கள் உருவாகலாம். சரியான நேரத்துக்குச் சாப்பிடும்போது, பித்தப்பையில் உள்ள பித்தநீர், தானாகவே சுருங்கி, குடலுக்குள் தள்ளப்படும். சரியான நேரத்துக்குச் சாப்பிடாதபோது பித்தப்பையிலேயே அந்த நீர் தங்கி, சுண்டி, மண்ணாகி, பிறகு கல்லாக மாறிவிடும்.
கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுக்கும்போதும், பித்தநீருடன் கொழுப்பு சேர்ந்து, அது அப்படியே படிந்து கல்லாக மாறுகிறது. இந்த இரண்டு விஷயங்களும்தான் பித்தப்பையில் கற்கள் உருவாக பிரதான காரணங்கள். இவை தவிர வேறு காரணங்களும் உண்டு.
பித்தப்பை கற்கள் பாதிப்புக்கு மருந்துகள் பெரிதாக வேலை செய்யாது. ஒருவாரம், பத்து நாள்கள் உடல்நலமின்றி இருந்து, சரியாகச் சாப்பிடாமலிருந்து சகதி (sludge) போன்ற நிலையில் இருக்கும்போது மருந்துகள் ஓரளவு வேலை செய்யும். அதுவே கல்லாக இறுகும்போது எந்த மருந்துகளும் பொதுவாக வேலை செய்வதில்லை. எனவே, லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சையின் மூலம் பித்தப்பை கற்களையும் பித்தப்பையையும் சேர்த்து அகற்ற வேண்டியிருக்கும்.
பித்தப்பையிலுள்ள கற்களை மட்டும் எடுத்தால் போதாதா… பித்தப்பையையும் சேர்த்துதான் அகற்ற வேண்டுமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. சிறுநீரகக் கற்கள் உருவாகும்போது, அந்தக் கற்களை மட்டும்தான் நீக்குவார்கள். அதே போல பித்தநாளக் கற்களிலும் கற்களை மட்டும்தான் நீக்குவோம். அப்படியிருக்கும்போது பித்தப்பை கற்களுக்கு மட்டும் ஏன் ஓர் உறுப்பையும் சேர்த்து நீக்க வேண்டும் என்கிறீர்கள், அந்த உறுப்பைக் காப்பாற்ற முடியாதா என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.