கடவுள் நம்பிக்கை என்பது தனிப்பட்டவரின் விருப்பம் சார்ந்தது. இப்படி சாமி வந்து ஆடுபவர்களிடம், “இது ஒருவகையான மனநல பிரச்னை, சாமியெல்லாம் உன்மீது வரவில்லை… நீ தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறாய்’ என்றெல்லாம் சொன்னால் பிடிக்காது. அதை ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். கோபப்படுவார்கள். அது கடவுளின் ஆக்கிரமிப்புதான் என்று அழுத்தமாக நம்புவார்கள்.
கோயில்கள், ஆன்மிக கூட்டங்கள், பிரசாரங்கள், திருவிழாக்கள், கச்சேரிகள் போன்றவற்றில் ஓங்கி, அதிர்ந்து ஒலிக்கும் மேள, தாளங்கள் இவர்களின் இந்த எண்ணத்தைத் தூண்டும். இந்த மனநிலையை உளவியலில் ‘சைக்கிடெலிக்’ ( Psychedelic ) என்று சொல்வோம். குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி முழுமையடையாத நிலையில், அவர்கள் கேட்கும் இசைக்கேற்ப ஆடுவதைப் பார்க்கலாம். பெரியவர்களிடமும் மனநல முதிர்ச்சியில் பலவீனம் இருக்கும் நிலையில், அவர்களும் இப்படி இசையைக் கேட்கும்போது ஆடுவார்கள்.
அப்படி ஆடுவதை அவர்கள் மனநல பிரச்னையாகப் பார்க்க மாட்டார்கள். கடவுளின் செயலாகவே பார்ப்பார்கள். அந்நிலையில் தன்னை மறந்து ஆடுவது மட்டுமன்றி, குறி சொல்வது, தரையில் உருண்டு புரள்வது போன்றவற்றையும் செய்வார்கள். சிலர் குடும்பமாக இதைச் செய்வதையும் பார்க்கலாம்.