Doctor Vikatan: என் அம்மாவுக்கு 50 வயது. அவருக்கு விடாமல் ஏப்பம் வந்துகொண்டே இருக்கிறது. தொடர்ச்சியாக அரைநாள் கூட இப்படி இருந்திருக்கிறது. ஜெலுசில் மாத்திரை போட்டால்தான் சரியாகிறது. வெளியிடங்களுக்குச் செல்லும்போது இது தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு என்ன காரணம்? என்ன செய்ய வேண்டும்?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இரைப்பை, குடல் சிகிச்சை மருத்துவர் வினோத்குமார்.

முதலில் ஏப்பம் வருவதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்வோம். சாப்பிடும்போது கொஞ்சம் காற்றையும் நாம் விழுங்குவோம். அளவுக்கதிகமான காற்றை விழுங்கும்போது, அது வெளியே வரும்போது ஏப்பமாக வெளியேறுகிறது.
ஏப்பம் வர வேறு சில காரணங்களும் இருக்கலாம். கார்பனேட்டடு பானங்கள், குளிர் பானங்கள் அதிகம் குடிப்பவர்களுக்கும் இந்தப் பிரச்னை இருக்கலாம். நார்ச்சத்து மிகுந்த உணவுகளை, குறிப்பாக புரொக்கோலி, முட்டைகோஸ், பீன்ஸ் போன்றவற்றைச் சாப்பிடும்போதும் சிலருக்கு ஏப்பம் அதிகம் வரலாம்.