Doctor Vikatan: சிலவகை மூலிகைகளுக்கு காயங்களை ஆற்றும் தன்மை உண்டு என கேள்விப்பட்டேன்… எந்த மூலிகை, எப்படிப்பட்ட காயத்தை ஆற்றும் என்று சொல்ல முடியுமா? இவை தீக்காயங்களையும் ஆற்றுமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி…
வெட்டுக்காயப் பூண்டு அல்லது கிணற்றுப்பாசான் என்பது ட்ரைடக்ஸ் புரொகும்பென்ஸ் (Tridax procumbens) எனப்படும் சூரியகாந்தி செடி வகையைச் சேர்ந்தது. இந்தச் செடி வெட்டுக்காயங்கள், சிராய்ப்புக் காயங்கள், ஆறாத புண்கள் போன்றவற்றை ஆற்றும் என்று சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
இந்தச் செடியில் ஆன்டிஇன்ஃப்ளமேட்டரி தன்மையும், காயத்தை ஆற்றும் தன்மையும் உண்டு. ஒரு புண் ஆற வேண்டுமென்றால் அதைச் சுற்றி ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். அந்தத் தன்மையும் இந்தச் செடியில் உண்டு என்பதால் விரைவாக புண்ணை ஆற்றுகிறது. காயம் ஏற்பட்டால் அதிலிருந்து ரத்தம் அதிகம் வெளியேறாமல் தடுத்து, புண்ணை சீக்கிரம் ஆற்றுவதற்கான செயலைச் செய்கிறது.