என் வயது 23. இன்னும் திருமணமாகவில்லை. கடந்த 3 மாதங்களாக எனக்கு மார்பகங்களில் தாய்ப்பால் சுரக்கிறது. இது எனக்கு கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்திவிட்டது. திருமணமாகாத, கர்ப்பம் தரிக்காத பெண்ணுக்கு தாய்ப்பால் சுரக்குமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்.
புரோலாக்டின் என்ற ஹார்மோன் சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளவர்களுக்கு அரிதாக இப்படி நிகழலாம். மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து சுரக்கக் கூடிய ஹார்மோன்தான் புரோலாக்டின்.
இந்த ஹார்மோன் அதிகமாகச் சுரக்க ஆரம்பித்தால் பீரியட்ஸ் சுழற்சி மாறும். உடல் எடை கூடும். திருமணம் ஆகாத மற்றும் கர்ப்பம் தரிக்காத பெண்களுக்கு மார்பகங்களில் பால் சுரப்பு இருக்கும்.
தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கும் இப்படி வரக்கூடும். நீங்கள் மகப்பேறு மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையின் பேரில் புரோலாக்டின் ஹார்மோன் பரிசோதனை செய்து பார்க்க வேண்டியது அவசியம். அது அசாதாரண அளவில் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.