எனக்குத் திருமணமாகி 6 வருடங்கள் ஆகின்றன. தாம்பத்திய உறவில் சிறிதும் நாட்டமில்லாமல் இருக்கிறது. இதனால் கணவருடன் எப்போதும் பிரச்னை வருகிறது. இதற்கான காரணம், தீர்வுகளைச் சொல்ல முடியுமா?
– பாரதி (விகடன் இணையத்திலிருந்து)

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.
“உங்களுடைய வயது, எத்தனை நாள்களாக உங்களுக்கு இந்தப் பிரச்னை இருக்கிறது, சமீபத்தில் வந்த பிரச்னையா, பல நாள்களாகத் தொடர்வதா போன்ற தகவல்களை நீங்கள் குறிப்பிடவில்லை. அதேபோல நீங்கள் வேறு ஏதேனும் மருந்துகள் எடுத்துக்கொள்பவரா, உங்களுக்கு வேறு உடல்நலப் பிரச்னைகள் உள்ளனவா என்றும் தெரியவில்லை.
பொதுவாக, இப்படி தாம்பத்திய உறவில் ஈடுபாடில்லாத நிலையை `ஹைப்போஆக்டிவ் செக்ஸுவல் டிசையர் டிஸ்ஆர்டர்’ (Hypoactive Sexual Desire Disorder) என்று சொல்வோம். அதாவது, இந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டோருக்கு தாம்பத்திய உறவில் மிகக்குறைவான நாட்டமோ, நாட்டமே இல்லாமலோ இருக்கும். அதாவது, அந்த நபருக்கு தன் துணையுடனான உறவே பாதிக்கப்படுகிற அளவுக்கு அந்த நாட்டமின்மை தீவிரமாக இருக்கும்.
உங்களுக்கு மன அழுத்தம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். தீவிர மன அழுத்தமோ, உங்கள் துணையுடனான மனஸ்தாபமோ, இருவருக்கும் இடையில் தீர்க்க முடியாத பிரச்னைகளோ இருக்கின்றனவா என்று பார்க்க வேண்டும். அப்படி இருந்தாலும் தாம்பத்திய உறவில் நாட்டமில்லாமல் போகலாம்.