Doctor Vikatan: இன்றைய சூழலில் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் பயன்பாட்டைத் தவிர்க்க முடியாது. இதனால் கண்கள் வறண்டு போகும் (Dry Eyes) பாதிப்பு வருகிறது. இந்தப் பிரச்னைக்கு எளிய தீர்வு என்ன?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்.
ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க வேண்டிய பிள்ளைகள், ஐடி போன்ற துறைகளில் எந்நேரமும் கம்ப்யூட்டர், லேப்டாப் உபயோகிப்பவர்களுக்கெல்லாம் ‘கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்’ ( Computer Vision Syndrome ) என்ற பிரச்னை பாதிப்பது அதிகரித்து வருகிறது.
தொடர்ந்து பல மணி நேரத்துக்கு கம்ப்யூட்டர், மொபைல் திரைகளைப் பார்த்துக்கொண்டிருப்பது கண்களை பாதிக்கும். கண்களில் எரிச்சல், சிவந்துபோவது, கண்களிலிருந்து நீர் வடிதல், தலைவலி, கண்கள் வறண்டு போவது போன்ற பிரச்னைகளுடன் கண் மருத்துவர்களைச் சந்திக்க இன்று நிறைய பேர் வருகிறார்கள்.
ஆன்லைன் வகுப்புகளை கூடியவரையில் பெரிய திரை உள்ள கம்ப்யூட்டரில் அட்டெண்ட் செய்வது மாணவர்களுக்கு நல்லது. பெரிய திரை உள்ள கம்ப்யூட்டருக்கு வாய்ப்பில்லாத பட்சத்தில் லேப்டாப் உபயோகிக்கலாம். எக்காரணம் கொண்டும் மொபைல் போன் மட்டும் வேண்டாம். மொபைலில் பார்க்கும்போது கண்களுக்கு அது அதிக சிரமத்தைத் கொடுக்கும். கண்கள் களைப்படையும். அதனால் தலைவலி வரும். இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்க, கம்ப்யூட்டர் பயன்படுத்தும்போது சில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும்.
உங்கள் கண்களுக்கும் கம்ப்யூட்டர் திரைக்குமான இடைவெளி குறைந்தது 25 இன்ச்சாவது இருக்க வேண்டும். உங்கள் பார்வையிலிருந்து கம்ப்யூட்டர் திரையானது சற்றே கீழிறங்கியபடி இருக்க வேண்டும். சாதாரணமாக ஒரு நிமிடத்துக்கு 10 முதல் 15 முறை நாம் கண்களை இமைக்கிறோம். ஆனால் கம்ப்யூட்டர் திரையைப் பார்க்கும்போது அதை மறந்துவிடுகிறோம்.
புத்தகங்களை வாசிக்கும்போது நமக்கு கண்களில் சிரமம் ஏற்படுவதில்லை. அதுவே கம்ப்யூட்டர் உபயோகிக்கும்போது சிரமமாக உணர்கிறோம். அதற்குக் காரணம் கம்ப்யூட்டர் திரைகளில் உள்ள பிக்செல்களே. அவற்றைப் பார்ப்பதற்காக நாம் கண்களுக்கு கூடுதல் சிரமத்தைக் கொடுக்கிறோம். அதனால்தான் கண் எரிச்சல், வறட்சி என எல்லா பிரச்னைகளும் வருகின்றன. இவற்றைத் தவிர்க்க, கண்களை அடிக்கடி இமைக்க மறக்கக்கூடாது.
கம்ப்யூட்டர் பயன்படுத்தும்போது வசதியாக உட்கார்ந்துகொள்ள வேண்டும். வெளிச்சமானது நேரடியாக கம்ப்யூட்டரில் படாமல், உங்களுக்குப் பின்னாலிருந்து வரும்படி பார்த்துக்கொள்ளவும். கம்ப்யூட்டர் உபயோகிக்கும்போது அதில் வெளியிலிருந்து வெளிச்சம் விழாதபடி வைத்துக் கொள்ளவும்.
20:20:20 விதி பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒவ்வொரு 20 நிமிடங்கள் கம்ப்யூட்டரை பயன்படுத்தியதும் 20 அடிகள் தொலைவிலுள்ள காட்சிகளை 20 நொடிகளுக்குப் பார்க்க வேண்டும் என்பதே இந்த விதி.
கம்ப்யூட்டர் பயன்படுத்தும்போது குழந்தைகளுக்குக் கண்களில் ஏதேனும் பிரச்னைகள் இருப்பது தெரிந்தால் பார்வை தொடர்பான பாதிப்புகள் உள்ளனவா என மருத்துவரிடம் செக் செய்யவும். பார்வை பாதிப்புகள் இருந்தால் அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ளவும். கண்ணாடி தேவை என்றால் அணியவும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.