45 வயதான என் சித்திக்கு சைனஸ் பிரச்னை இருப்பதாக ஏறத்தாழ ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இ.என்.டி மருத்துவர் மூலம் தெரிந்து கொண்டேன். அறுவை சிகிச்சை செய்துகொள்ளச் சொல்லி அந்த மருத்துவர் அறிவுறுத்தினார்.
சைனஸ் அறுவை சிகிச்சை செய்யும் முன் மேலும் இரண்டு இ.என்.டி மருத்துவர்களிடம் கேட்டபோது அவர்கள் இருவருமே அறுவை சிகிச்சை வேண்டாம் என சொல்லி விட்டார்கள். இப்போது சைனஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கிறோம். தயவுசெய்து தெளிவுபடுத்தவும்.
– அஷோக் குமார் (விகடன் இணையத்திலிருந்து)

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் மோனிகா.
“உங்கள் சித்தியின் உடல்நலம் தொடர்பான விரிவான தகவல்கள் இல்லாமல் இதற்கு பதில் சொல்வது கஷ்டம். உங்கள் சித்திக்கு சைனஸ் என்று பொதுவாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அவருக்கு மூக்கடைப்பு, தலைவலி, தலைபாரம் போன்றவை இருக்கின்றனவா அல்லது தலைவலியுடன் அலர்ஜி போன்ற ஏதாவது இருக்கிறதா என்பதெல்லாம் தெரிய வேண்டும். தவிர அந்தப் பிரச்னைகள் எத்தனை நாள்களாக அவருக்கு இருக்கின்றன, எத்தனை நாள்களுக்கொரு முறை வருகின்றன என்பதும் முக்கியம்.
அது தெரிந்தால்தான் மருந்துகளுக்கு அவரது பிரச்னை கட்டுப்படுமா என்பது தெரியும். மருந்துகளுக்கு அவரது உடல் எப்படி ரியாக்ட் செய்கிறது என்பதும் பார்க்கப்பட வேண்டும். அதையடுத்து சிடி ஸ்கேன் தேவையா என்பதை மருத்துவர் பார்த்து அறிவுறுத்துவார்.
சிடி ஸ்கேன் ரிப்போர்ட்டில் அவரது சைனஸ் பாதிப்பின் தீவிரம் தெரியவரும். அது அறுவை சிகிச்சை தேவைப்படுகிற அளவுக்குத் தீவிரமாக இருக்கிறதா, சைனஸில் பூஞ்சைத் தொற்று இருக்கிறதா, சதை வளர்ச்சி தென்படுகிறதா என்பதையெல்லாம் பார்த்த பிறகுதான் முடிவுசெய்ய வேண்டும்.

அறுவை சிகிச்சை தேவையா, இல்லையா என்ற கேள்விக்கு பொத்தாம் பொதுவாக தேவை என்றோ, இல்லை என்றோ பதில் சொல்லிவிட முடியாது. சம்பந்தப்பட்ட நபரின் பிரச்னையை முழுமையாகப் பார்த்து, அதுவரை அவருக்குக் கொடுக்கப்பட்ட சிகிச்சை, அந்த மருந்துகளின் பலன் எப்படியிருந்தது என்று தெரிந்துதான் அறிவுறுத்த முடியும். மருந்துகள் உதவாது என்பது உறுதியாகத் தெரிந்தால்தான் அறுவை சிகிச்சை பற்றி யோசிக்கப்படும்.”
உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?