Doctor Vikatan: சென்ட், ரூம் ஸ்பிரே வாசனையை உணர்ந்ததும் அதிகரிக்கும் தலைவலி… தீர்வுகள் உண்டா?

Share

Doctor Vikatan: சென்ட், ரூம் ஸ்பிரே, பூக்கள் எனக் கொஞ்சம் ஸ்ட்ராங்கான வாசனையை உணர்ந்ததும் உடனே எனக்குத் தலைவலி ஆரம்பமாகும். அதிலிருந்து விடுபட சில மணி நேரமாகும். இதற்கு என்ன காரணம்? சிகிச்சைகள் உண்டா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் மீனாட்சி சுந்தரம்.

நரம்பியல் மருத்துவர் மீனாட்சி சுந்தரம்

இது மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலியின் அறிகுறியாகவே இருக்கக்கூடும். தூக்கம் கெட்டுப்போனால் தலைவலி, வெயிலில் சென்றால் தலைவலி வருவது, அதீத பசியால் ஏற்படும் தலைவலி, டென்ஷன் ஆனால் தலைவலி, தலைக்குக் குளித்தால் தலைவலி என இந்த ஐந்து விஷயங்களும் தலைவலியைத் தூண்டும் பிரதான ஐந்து காரணிகளாக இருக்கின்றன.

இவை தவிர சிலருக்கு நீங்கள் குறிப்பிட்டது போல பெர்ஃபியூம் வாசனை, சிகரெட் வாசனையை உணர்ந்ததும் தலைவலி வரலாம். மஞ்சள் நிற விளக்கைப் பார்த்தால் சிலருக்குத் தலைவலி வரலாம். இவை எல்லாமே தலைவலியைத் தூண்டும் காரணிகள்தான்.

வலியைத் தூண்டும் காரணிகளைத் தவிர்ப்பது ஒரு வழி. ஆனால், அது எல்லா நேரமும் எல்லோருக்கும் சாத்தியமில்லை. வெயிலில் செல்லும்போது தொப்பி அணிந்துகொள்ளலாம். நிறைய தண்ணீர் குடிப்பது, குடை உபயோகிப்பது போன்றவை ஓரளவு பலன் தரும்.

perfume

நரம்பியல் மருத்துவரை அணுகி மைக்ரேனுக்கு முறையான சிகிச்சையைத் தொடங்க வேண்டும். வலி வராமல் தடுப்பதற்கு அவை உதவும். இது அடிக்கடி தலைவலியால் அவதிப் படுவோருக்குதான். மற்றபடி என்றோ ஒருநாள் தலைவலி வருகிறது என்றால் அதற்கு அடிக்கடி மாத்திரை எடுத்துக் கொள்வது சரியல்ல.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com