கல் உப்பு, டேபிள் சால்ட்…. இரண்டில் எது ஆரோக்கியமானது? ஒருவர் ஒருநாளைக்கு எவ்வளவு கிராம் உப்பு சேர்த்துக்கொள்ளலாம்? இந்துப்பு ஆரோக்கியமானதா?
– கௌதமி (விகடன் இணையத்திலிருந்து)

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்.
“2300 மில்லிகிராமைவிட குறைவான அளவு உப்புதான் ஒருவருக்கு ஆரோக்கியமானது என்கிறது உணவு வழிகாட்டுதல் நெறிமுறை. அதிலும் ரத்த அழுத்தம், இதயநோய்கள் உள்ளவர்களுக்கு 1500 முதல் 2000 மில்லிகிராமை மிஞ்ச வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள்.
கல் உப்பு என்பது சுத்திகரிக்கப்படாதது. கல் உப்பில் உப்புடன் கால்சியம், பொட்டாசியம் போன்ற தாதுக்களும் இருக்கும். அவையெல்லாம் உடலுக்கு நல்லது என்பதால் சுத்திகரிக்கப்படாத கல் உப்பு ஓரளவு நல்லது. ஆனால் கல் உப்போ, தூள் உப்போ- இரண்டிலுமே 98 சதவிகிதம் சோடியம்தான் இருக்கும்.
பிங்க் ஹிமாலயன் சால்ட் எனப்படும் இந்துப்பு ஆரோக்கியமானது என நினைத்து நிறைய பேர் இன்று அதை உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். சுத்திகரிக்கப்படாத கல் உப்பை போல இந்துப்பிலும் கூடுதலாக சில தாதுச்சத்துகள் இருக்கும். அதைவைத்து அது ஆரோக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
ஆனால் அது உப்பே இல்லை, அதை எடுத்துக்கொள்வதால் உடலில் சோடியம் அளவு அதிகரிக்காது என குழப்பிக்கொண்டு நிறைய பேர் வழக்கத்தைவிட அதிக அளவில் இந்துப்பை சேர்த்துக்கொள்கிறார்கள். அது தவறு. உங்களுக்கு விருப்பமானால் இந்துப்பு பயன்படுத்தலாம். ஆனால் அதிலும் 98 சதவிகிதம் சோடியம்தான் உள்ளது என்பதை மறக்க வேண்டாம். எனவே அதையும் பரிந்துரைக்கப்பட்ட அளவுதான் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
உப்போ, சர்க்கரையோ…. பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு மேல் எடுத்தால் நிச்சயம் ஆரோக்கியக் கேடுதான். உப்பு அதிகம் சேர்த்துக்கொள்வதால் ரத்த அழுத்தம், இதய நோய்கள், சிறுநீரக நோய்கள் போன்றவை பாதிக்கலாம். சர்க்கரை அதிகம் சேர்த்துக்கொள்வதால் நீரிழிவு, உடல்பருமன், இதய நோய்கள் வரலாம். எனவே அளவுக்கு மிஞ்சினால் இரண்டுமே விஷம்தான்.

உப்பு குறைவாகச் சாப்பிடுவது சரியா என சிலர் கேட்பதுண்டு. வெயிலில் வேலை செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றோர் குறைந்தபட்ச அளவிலாவது உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும்.
உப்பைத் தவிர்க்கிறேன் என நினைத்துக்கொண்டு மிகக்குறைவான அளவு சேர்த்துக்கொள்ளும்போது அதை சிறுநீரகங்கள் வெளியேற்றாமல் தேக்கிவைத்துக் கொள்ளும். சிறுநீரகப் பிரச்னைகள் இல்லாதவர்கள், உப்பைக் குறைத்துச் சாப்பிடுவதில் தவறில்லை. சிலவகையான உடல்நல பாதிப்புகள் உள்ளவர்களுக்கு குறைவான உப்பு சேர்த்துக்கொள்வதாலும் பிரச்னைகள் வரலாம். எனவே இது குறித்து அவரவர் மருத்துவரைக் கலந்தாலோசித்து முடிவு செய்வதே சரியானது.”
உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?