பிறந்த குழந்தைக்கு ஒருவயது வரை தாய்ப்பால் கொடுக்கச் சொல்கிறோம். 6 மாதங்களுக்குப் பிறகு தாய்ப்பாலுடன் சேர்த்து கஞ்சி உள்ளிட்ட இதர உணவுகளையும் ஆரம்பிக்கச் சொல்கிறோம். இந்த உணவுகளிலும் உப்போ, சர்க்கரையோ சேர்த்துப் பழக்காதீர்கள் என்றே அறிவுறுத்துவோம். சர்க்கரையே சேர்க்காததால் குழந்தைக்கு எனர்ஜியே இருக்காது என நினைக்கத் தேவையில்லை. பெரும்பாலான அம்மாக்களும் குழந்தைக்கு ஆறு மாதங்கள் ஆனதுமே பிஸ்கட்டை பாலில் நனைத்தோ, தண்ணீரில் தோய்த்தோ கொடுக்கிறார்கள். அதனால் குழந்தை இனிப்புச்சுவைக்குப் பழக்கமாகிறது. ஒரு கட்டத்தில் இனிப்புக்கு அடிமையாகிவிடுகிறார்கள்.
சர்க்கரையே இல்லாமல் சாப்பிடுவதில் எந்தத் தவறுமே இல்லை. ஏற்கெனவே சொன்னதுபோல நாம் என்ன சாப்பிட்டாலும் அது இறுதியில் குளுக்கோஸாகத்தான் மாறப் போகிறது. உடலுக்கு என்ன சத்து தேவை என்பது சரியாகத் தெரியும்.
எனவே உங்கள் வயது, எடை, உடல் உழைப்புக்கேற்ப அளவாக கார்போஹைட்ரேட், பழங்கள், சிறுதானியங்கள் எடுத்துக்கொள்ளலாம். ஆரோக்கியமாகச் சாப்பிட வேண்டியதுதான் அவசியம். பாக்கெட் உணவுகளைச் சாப்பிடுகிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள்… அதில் Added Sugar, Total Sugar என இரண்டு இருக்கும். இதில் Added Sugar துளியும் இல்லை என்று தெரிந்தால்தான் அதைச் சாப்பிட வேண்டும். சில உணவுகளில் இயற்கையாகவே சர்க்கரைச் சத்து இருக்கும். இதே விதி உப்புக்கும் பொருந்தும்.
எனவே சர்க்கரையே இல்லாமல் சாப்பிடுவதில் எந்தத் தவறும் இல்லை. நம் உணவில் இயற்கையாகவே உள்ள சர்க்கரைச் சத்தே உடலுக்குப் போதுமானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.