Doctor Vikatan: சருமத்தைப் பொலிவாக்க சர்க்கரையையும் காபித்தூளையும் ஸ்க்ரப்பராக பயன்படுத்தலாமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்
நம்முடைய சரும செல்கள் 28 நாள்களுக்கொரு முறை உதிர்ந்து, புதிய செல்கள் உருவாகும். சரும ஆரோக்கியத்துக்கு ‘எக்ஸ்ஃபோலியேஷன்’ எனப்படும் இந்தச் சுத்திகரிப்பு முறை மிக முக்கியம். இது ‘பிசிகல் எக்ஸ்ஃபோலியேஷன்’, ‘கெமிக்கல் எக்ஸ்ஃபோலியேஷன்’ என இருவகைப்படும்.
சற்றே கொரகொரப்பான ஸ்க்ரப் பயன்படுத்தி சருமத்தின் இறந்த செல்களை நீக்குவது பிசிகல் எக்ஸ்ஃபோலியேஷன் எனப்படும். மருத்துவத்தன்மை வாய்ந்த பொருள்களைப் பயன்படுததி சருமத்தின் இறந்த செல்களை நீக்குவது கெமிக்கல் எக்ஸ்ஃபோலியேஷன் எனப்படும். இந்த இரண்டில் கெமிக்கல் எக்ஸஃபோலியேஷன் என்பது சருமத்துக்கு மிகவும் பாதுகாப்பானது. ஏனென்றால் பிசிகல் எக்ஸ்ஃபோலியேஷனில் பயன்படுத்தப்படுகிற பொருள்களின் துகள்கள் சற்றே பெரிதாக இருக்கும் என்பதால் சருமத்தை பாதிக்கக்கூடும்.