அடுத்து நீங்கள் யோசிக்க வேண்டியது, கெமிக்கல் கலந்த டையா, பாதி கெமிக்கல் கலந்ததா, இயற்கையான டையா என்பது. இயற்கையான டை என்றாலும் அது எல்லோருக்கும் ஏற்றுக் கொள்ளும் என்று சொல்ல முடியாது. வீஸிங், தும்மல் பாதிப்பு உள்ளவர்களுக்கு அந்த வகை டை அதிக பாதிப்பைக் கொடுக்கலாம். அவர்களுக்கு டை உபயோகித்ததும் இருமல் அதிகரிக்கும். தூங்கும்போது அதன் தீவிரம் அதிகமாக இருக்கும்.
சிலருக்கு கெமிக்கல் டை ஏற்றுக்கொள்ளும். குறிப்பிட்ட நேரம் அதை வைத்திருந்துவிட்டு கூந்தலை அலசிவிடுவதால் பெரிய பாதிப்புகள் இருக்காது. அதுவே, இயற்கையானதென நினைத்து உபயோகிக்கும் மருதாணி பெரிய அலர்ஜியை ஏற்படுத்தலாம். எனவே, இயற்கையான டையாக இருந்தாலும் `வைர ஊசி என்பதற்காக கண்ணைக் குத்திக்கொள்ள முடியாது’ என்பது போலதான் அதை அணுக வேண்டும்.
சிலருக்கு மண்டைப் பகுதியின் தொடக்கத்திலுள்ள முடிகள் டை செய்த அடுத்த நான்கைந்து நாள்களிலேயே நரைக்கத் தொடங்கிவிடும். அதை ரீடச் செய்வதில் தவறில்லை. ஆனால், நீங்கள் உபயோகிக்கும் டை தரமானதாக இருக்க வேண்டியது அவசியம். உங்கள் தலையில் வெட்டுக்காயமோ, கட்டியோ, புண்ணோ இருந்தால் கெமிக்கல் டையில் உள்ள ரசாயனங்கள் அவற்றின் வழியே உடலுக்குள் ஊடுருவ வாய்ப்பு உண்டு.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.