Doctor Vikatan: கூந்தல் வளர்ச்சிக்கான சீரம்கள் இப்போது விற்பனையாகின்றன. அவற்றில் மினாக்ஸிடில் என்பதைச் சேர்க்கிறார்கள். அதுதான் கூந்தலை வளரச் செய்யும் என்கிறார்களே… அது உண்மையா? அதை உபயோகிப்பதை நிறுத்திவிட்டால் முன்பைவிட கூந்தல் அதிகமாக உதிரும் என்றும் சொல்கிறார்களே… கூந்தல் வளர்ச்சிக்கு சீரம் அவசியமா? அதை எப்படித் தேர்வு செய்ய வேண்டும்?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்
சீரம் பயன்படுத்தினால் கூந்தல் வளரும் என்ற முடிவுக்கு வருவதற்கு முன், கூந்தல் உதிர்வுக்கான காரணங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். பரம்பரைத் தன்மை, ஆண்களுக்கோ, பெண்களுக்கோ ஏற்படக்கூடிய வழுக்கைப் பிரச்னை, தைராய்டு உள்ளிட்ட ஹார்மோன் பிரச்னைகள், பிரசவத்துக்குப் பிறகான காலகட்டம், மெனோபாஸ், ஸ்ட்ரெஸ், அதீத காய்ச்சல், அறுவை சிகிச்சை, அதிக ரத்த இழப்பு, கீமோதெரபி, கருத்தடை மாத்திரை பயன்பாடு, சிலவகை மருந்துகள் ஏற்படுத்தும் பக்க விளைவுகள் என முடி உதிர்வுக்குப் பல காரணங்கள் இருக்கக்கூடும்.
வைட்டமின் சி, இரும்புச்சத்துக் குறைபாடு, கொழுப்புச்சத்தே இல்லாதது, துத்தநாகக் குறைபாடு என சத்துக் குறைபாடுகளும் கூந்தல் உதிர்வுக்கு காரணமாகலாம். எனவே காரணமறிந்துதான் சிகிச்சையைத் தொடங்க வேண்டும்.