நேரமின்மை காரணமாக என்னால் தினமும் காலை உணவு சாப்பிட முடிவதில்லை. முதல்நாள் இரவே ஓட்ஸை ஊறவைத்து மறுநாள் சாப்பிடும் ஓவர்நைட் ஓட்ஸை காலை உணவாக எடுத்துக்கொள்வது ஆரோக்கியமானது என்கிறாள் என் தோழி. அதென்ன ஓவர்நைட் ஓட்ஸ்? அது காலை உணவுக்கு மாற்றாகுமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த டயட்டீஷியன் கற்பகம்
உங்கள் தோழி சொன்னது சரிதான். நேரமின்மை காரணமாக காலை உணவைத் தவிர்ப்பவர்களுக்கு ஓவர்நைட் ஓட்ஸ் நிச்சயம் வரப்பிரசாதம்தான். ஆனால் வெறுமனே இன்ஸ்டன்ட் ஓட்ஸை ஓவர்நைட் ஓட்ஸாக செய்து சாப்பிடுவது பலன் தராது. ஓவர்நைட் ஓட்ஸ் தயாரிப்புக்கு ரா ஓட்ஸ், ரோல்டு ஓட்ஸ், ஸ்டீல் கட் ஓட்ஸ் ஆகியவைதான் ஏற்றவை. இந்தவகை ஓட்ஸில்தான் எந்தவிதமான பதப்படுத்தலும் இல்லாமல் எல்லா சத்துகளும் அப்படியே கிடைக்கும். அதாவது கார்போஹைட்ரேட், புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் பி, தாமிரச்சத்து, மக்னீசியம், துத்தநாகம் என எல்லா சத்துகளும் இருக்கும். இன்ஸ்டன்ட் ஓட்ஸில் சத்துகள் குறைவாக இருக்கும்.
ஓவர்நைட் ஓட்ஸ் தயாரிக்க மேற்குறிப்பிட்ட ஓட்ஸ் வகையில் ஒன்றில் தேவையான அளவை எடுத்து தண்ணீர், பால், பாதாம் பால், தேங்காய்ப் பால் என ஏதேனும் ஒன்றில் ஊறவைக்க வேண்டும். இதை முதல்நாள் இரவே ஊறவைத்துவிட வேண்டும். மறுநாள் காலையில் எடுத்துப் பார்த்தால் சமைத்த ஓட்ஸ் பக்குவத்தில் மெத்தென ஊறியிருக்கும். எல்லா நீர்ச்சத்தையும் அது உறிஞ்சியிருக்கும் என்பதால் தேவைப்பட்டால் நீங்கள் மேலும் சிறிது பாலோ, தண்ணீரோ சேர்த்துக்கொள்ளலாம். சிலர் தயிர்கூட சேர்த்துக்கொள்வார்கள்.