Doctor Vikatan: சிலருக்கு குறிப்பிட்ட சோப், ஷாம்பூ, காஸ்மெட்டிக்ஸ் என எல்லாமே செட் ஆகிவிடும். பல வருடங்களாக அவற்றையே உபயோகிப்பார்கள். சோப், பவுடர் உள்ளிட்ட காஸ்மெட்டிக்ஸ் என எல்லாவற்றையும் வருடக் கணக்கில் மாற்றாமல் உபயோகிப்பது சரியா அல்லது அவ்வப்போது அவற்றை மாற்ற வேண்டுமா? மாற்ற வேண்டும் என்றால் எத்தனை மாதங்களுக்கொரு முறை மாற்றலாம்?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்.
நாம் நம் சருமத்துக்கு உபயோகிக்கும் பொருள்களானது, பல விஷயங்களைப் பொறுத்து தீர்மானிக்கப்பட வேண்டியது. அந்த வகையில் முதலில் கவனிக்கப்பட வேண்டியது, ஒருவருடைய சருமத்தின் தன்மை. சிலருக்கு சருமத்தில் செபேஷியஸ் சுரப்பிகளின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருக்கலாம். அதன் விளைவாக அவர்களுடைய சருமம் எண்ணெய்ப்பசை தன்மை கொண்டதாக இருக்கலாம்.
சிலருக்கு, T zone எனப்படும் மூக்கு மற்றும் நெற்றிப் பகுதியில் மட்டும் எண்ணெய்ப்பசை இருக்கலாம். இன்னும் சிலருக்கு வறண்ட சருமம் இருக்கலாம். வேறு சிலருக்கு சருமம் சென்சிட்டிவ்வாக இருக்கலாம். அவர்களுக்கு சூரிய வெளிச்சம் பட்டாலே சருமம் சிவந்து போகும். இன்னும் சிலருக்கு சாதாரண சருமம் இருக்கலாம். இப்படி சருமத்தின் தன்மையைப் பொறுத்து அவர்களுக்கான அழகு சாதனங்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.