கர்ப்ப காலத்தில் பயணம் செய்வதில் எந்தப் பிரச்னையும் இருப்பதில்லை. ஒருவேளை உங்களுக்கு கர்ப்பத்தில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டிருந்தால், மருத்துவ ஆலோசனைக்குப் பிறகே பயணம் செய்ய வேண்டும்.
கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் களைப்பு, வாந்தி, மயக்கம் போன்றவை இருக்கும் என்பதால் அந்த நாள்களில் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. அதே போல 28 வாரங்களுக்குப் பிறகு, பிரசவ தேதியை நெருங்கும்போது பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. அந்த வகையில் 14 முதல் 28 வாரங்கள் வரை பயணம் செய்ய ஏற்றவை.
பயணம் செய்வதற்கு முன், உங்கள் மகப்பேறு மருத்துவரை அணுகி உங்களுடைய ரத்த அழுத்தம், உடல்நிலை, கருவிலுள்ள குழந்தையின் நிலை போன்றவற்றைத் தெரிந்து கொள்வது அவசியம். ஒருவேளை உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்தால், நீங்கள் பயணத்தைத் தவிர்ப்பதே பாதுகாப்பானது.
உயர் ரத்த அழுத்தம் காரணமாக ஏற்படும் `ப்ரீஎக்ளாம்சியா’ எனப்படும் பிரச்னை உள்ளவர்களுக்கு, திடீரென வலிப்பு வர வாய்ப்பு அதிகம் என்பதால், அவர்கள் கவனமாக இருக்க வேண்டும். தலைவலி, பார்வை மங்குதல், கை, கால்களில் வீக்கம், குழந்தையின் அசைவு சரியாகத் தெரியாதது, நெஞ்செரிச்சல், வாந்தி போன்ற அறிகுறிகள் இருந்தால் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.