என் வயது 29. இரண்டு மாத கர்ப்பிணி. கர்ப்பம் உறுதியானது முதல் எனக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு இருக்கிறது. இது சாதாரணமானதுதானா அல்லது ஏதேனும் பிரச்னையின் அறிகுறியா?
மாதவி (விகடன் இணையதளத்திலிருந்து…)
பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி
“கர்ப்பம் உறுதியானதும் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படுவது இயல்பானதுதான். இன்னும் சொல்லப்போனால் சில பெண்களுக்கு பீரியட்ஸ் தள்ளிப்போனதும் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படுவதையே கர்ப்பத்தின் அறிகுறியாகக் கூட எடுத்துக்கொள்ளலாம்.
ஒரு பெண் கர்ப்பம் தரித்ததும் அவளது உடலில் புரொஜெஸ்ட்ரான் மற்றும் பீட்டா ஹெச்.சி.ஜி (Beta–hCG) ஆகிய இரண்டு ஹார்மோன்களின் அளவும் அதிகமாக இருக்கும். அதனாலேயே அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற உணர்வு இருக்கும். இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.