என் வயது 28. ஒரு குழந்தை இருக்கிறது. கர்ப்பத்தடை மாத்திரைகள் எடுத்து வருகிறேன். இந்த மாத்திரைகள் எடையை அதிகரிக்குமா?
– சந்தியா (விகடன் இணையத்திலிருந்து)

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.
“கருத்தடை மாத்திரைகள் எடுக்கும் பலருக்கும் இந்தக் கேள்வி இருக்கிறது. ஆனால் அதற்கு வாய்ப்பில்லை. ஒருவேளை எடை கூடினாலும், அது 0.3 கிலோ, 0.4 கிலோ என்ற அளவில்தான் கூடும். அதுவும் நீர் கோப்பதன் காரணமாக இருக்கலாம்.
கர்ப்பத்தடை மாத்திரைகளில், ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரோன் என இரண்டு ஹார்மோன்கள் இருக்கும்.
முதன்முதலில் கர்ப்பத்தடை மாத்திரை அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதில் மிக அதிக அளவு ஈஸ்ட்ரோஜென், அதாவது, 150 மைக்ரோகிராம் அளவு இருந்தது. ஆனால் இப்போது புழக்கத்தில் இருக்கும் மாத்திரைகளில் 50 மைக்ரோகிராமுக்கும் குறைவான அளவு ஈஸ்ட்ரோஜென்தான் இருக்கிறது. பெரும்பாலும் 20, 30 மைக்ரோகிராம் அளவு ஈஸ்ட்ரோஜென் உள்ள மாத்திரைகள்தான் பரிந்துரைக்கப்படுவதால் எடை அதிகரிக்க வாய்ப்பில்லை.
ஒரு சிலருக்கு உடலில் நீர்கோக்கும் பிரச்னை இருக்கும் என்பதால் லேசான எடை அதிகரிப்பு தெரியும். அதுவும் மாத்திரைகளை நிறுத்தியதும் எடை குறைந்தது போல உணர்வார்கள். இதையும் மீறி எடை கூடினால் அதற்கு ஹார்மோன் பிரச்னை உள்ளிட்ட வேறு பாதிப்புகளோ, தைராய்டு பாதிப்போ, பிசிஓடி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டிகளோ இருக்கின்றனவா என்று பார்க்க வேண்டும்.