எனக்கு 2-வது மகப்பேற்றின்போது நீரிழிவு வந்தது. அதன் பிறகு டாக்டர் பரிந்துரையின் பேரில் மருந்துகள் எடுத்துக்கொள்கிறேன். ரத்தச் சர்க்கரை அளவு நார்மலாக இருந்தபோதிலும் அடிக்கடி சிறுநீர்த் தொற்று ஏற்படுகிறது. இதற்கு ஏதேனும் தீர்வு உண்டா?
– கீர்த்தனா (விகடன் இணையத்திலிருந்து)

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவரும், லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சை நிபுணருமான ஆர். கார்த்திகா.
“ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும்போதும் அடிக்கடி சிறுநீர்த் தொற்று வருகிறது என்றால் ஒருமுறை மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது சிறந்தது. அடிக்கடி வரும் சிறுநீர்த் தொற்றுக்கு வேறு காரணங்கள் இருக்கின்றனவா என்று பார்க்கப்பட வேண்டும். அடிக்கடி ஏற்படும் சிறுநீர்த் தொற்று பாதிப்பை Recurrent Urinary Tract Infection என்று சொல்வோம். அதாவது ஆறு மாதங்களில் இருமுறைக்கு மேல் அல்லது ஒரு வருடத்தில் மூன்று முறைக்கு மேல் சிறுநீர்த் தொற்று வருவதை ‘ரெகரன்ட் யூரினரி ட்ராக்ட் இன்ஃபெக்ஷன்’ என்று சொல்வோம். சர்க்கரைநோய் இருப்பவர்களுக்கு இப்படி அடிக்கடி சிறுநீர்த் தொற்று வரலாம்.
அதற்கு முன், சிறுநீர்த் தொற்று ஏற்படும்போது சிறுநீரை ‘கல்ச்சர் சென்சிட்டிவிட்டி டெஸ்ட்’ செய்து அதில் என்ன கிருமி வளர்கிறது, அது எந்தெந்த ஆன்டிபயாடிக்குகளுக்கு எதிர்வினையாற்றுகிறது என்று பார்க்க வேண்டியிருக்கும். அதைவைத்து முழுமையான ஆன்டிபயாடிக் சிகிச்சை எடுக்க வேண்டியிருக்கும்.