Doctor Vikatan: என் வயது 35. கடந்த வருடம் இரண்டாவது குழந்தை பிறந்தது. அதற்குப் பிறகு எனக்கு அடிக்கடி தலை பாரமாக இருப்பதாகவும், நீர் கோத்தது போலவும் உணர்கிறேன். ஒற்றைத் தலைவலியும் வாந்தியும் வருகிறது. சித்த மருத்துவத்தில் இதற்கு ஏதேனும் நிரந்தர சிகிச்சை உண்டா?
– Bhavani Priya, விகடன் இணையத்திலிருந்து.
சைனஸ் காரணமாகவும் இப்படிப்பட்ட வலி வரலாம். தலையில் ஒரு பக்கம் வலி வரும். வாந்தி வரும். சத்தமோ, வெளிச்சமோகூட வலியை தீவிரப்படுத்தும். நிம்மதியாகத் தூங்கவோ, சாப்பிடவோ முடியாது. வாந்தி எடுத்தால்தான் நிம்மதியாக உணர முடியும்.
சித்த மருத்துவத்தில் இந்தப் பிரச்னைக்கு வெளிப் பிரயோகமாகப் பயன்படுத்தும் மருந்துகளும் உள்ளன. உள்ளுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளும் உள்ளன.
மூலிகை இலைச்சாற்றை மூக்கில் சொட்டுகளாக விடுவது நசிய முறை எனப்படும். சுக்குத்தைலத்தை இரண்டு நாசித் துவாரங்களிலும் நசியமாக விடலாம். தும்பை இலைச்சாறு அல்லது நொச்சி இலைத் தைலத்தையும் தலா இரு சொட்டுகள் விடலாம்.