வயது மற்றும் உடலுழைப்பை வைத்து ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுக்கான `ரெகமண்டடு டயட்டரி அலவன்ஸ்’ அளவீடுகள் உள்ளன. உதாரணத்துக்கு வளர்ந்த ஒருவருக்கு தட்டில் பாதி அளவு காய்கறிகள் இருக்க வேண்டும். மீதி அரை பாகத்தை இரண்டாகப் பிரித்து ஒரு பாகம் புரதச்சத்தாகவும், இன்னொரு பாகம் கார்போஹைட்ரேட்டாகவும் இருக்கும்படி எடுத்துக் கொள்ளலாம். இப்படிச் சாப்பிடும்போது தான் நமக்கு சரிவிகிதமாக எல்லா சத்துகளும் கிடைக்கும்.
சிலர் காய்கறிகள், பழங்களை குறைவாக எடுத்துக் கொள்வார்கள். அது தவறு. தினமும் ஒன்றிரண்டு பழங்கள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். நீரிழிவு உள்ளவர்கள் அதற்கேற்ப மருத்துவ ஆலோசனையுடன் பழங்களை எடுத்துக் கொள்ளலாம்.
காய்கறிகளும் அப்படித்தான்… தினமும் 200 முதல் 300 கிராம் காய்கறிகளை அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். பலவித காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டியதும் மிக அவசியம். காலையில் சாம்பாரில் காய்கறிகளைச் சேர்ப்பது, காய்கறிகளிலேயே சட்னி செய்வது, பழங்கள் சேர்த்து ஸ்மூத்தி செய்வது போன்று எடுத்துக் கொள்ளலாம்.
மதிய உணவுக்கு பொரியல், கூட்டு, சூப் என காய்கறிகளின் பங்கு அவசியம் இருக்க வேண்டும். இரவிலும் சட்னி, சாம்பார், சூப் போன்ற வடிவங்களில் காய்கறிகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.