இத்தனை நல்ல பலன்கள் இருந்தாலும் க்ரீன் டீயை அளவுக்கதிகமாகக் குடிக்கக்கூடாது. ஒரு நாளைக்கு 3 கப்புகளுக்கு மேல் குடிக்க வேண்டாம். அதையும் காலையில் தொடங்கி, மாலை 4 மணிக்குள் குடித்து முடித்துவிட வேண்டும். அளவுக்கு அதிகமாகக் குடித்தால் உடலில் நீர்வறட்சி ஏற்படும். பால் சேர்க்காத க்ரீன் டீதானே…. அதுவும் தண்ணீருக்கு இணையானதுதானே என நினைத்து தண்ணீருக்கு பதில் க்ரீன் டீயை குடிக்க வேண்டாம். தினமும் காலையில் எழுந்ததும், பிறகு முற்பகலில், அடுத்து மாலை 4 மணிக்குள் குடிப்பது சிறந்தது.
சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்கள், கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள், இதயநோய் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையில்லாமல் க்ரீன் டீ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். கஃபைன் சென்சிட்டிவிட்டி உள்ளவர்களும் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகளும் தாய்ப்பால் கொடுப்பவர்களும் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 2 கப்புகளுக்கு மேல் குடிக்க வேண்டாம். ஆரோக்கியமானது என்பதால் வெறும் க்ரீன் டீயை மட்டுமே குடித்துக்கொண்டிருப்பது உங்களை நோயின்றி வாழச் செய்யாது. ஆரோக்கியமான, நோயற்ற வாழ்க்கைக்கு சரியான உணவுப்பழக்கம், போதுமான தூக்கம், தேவையான அளவு தண்ணீர் குடிப்பது, உடற்பயிற்சி போன்றவையும் அவசியம் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.