Doctor Vikatan: என் வயது 59. எத்தனை நாள்களுக்கு ஒரு முறை அசைவ உணவுகள் சாப்பிடலாம்? அசைவத்தில் எப்படிப்பட்ட உணவுகளைச் சாப்பிட வேண்டும்… எத்தனை நாள்களுக்கொரு முறை பிரியாணி சாப்பிடலாம்?
Abdul Rasheed, விகடன் இணையத்திலிருந்து.
பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.
வயதைக் குறிப்பிட்டுள்ள நீங்கள், உங்கள் உயரம் மற்றும் எடையைக் குறிப்பிடவில்லை. ஆணோ, பெண்ணோ ஒருவருக்கு வயிற்றுப் பகுதியைச் சுற்றி (அப்டாமினல் ஒபிசிட்டி) கொழுப்பு அதிகமிருந்தால், இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் பிரச்னை வரும். அதாவது இன்சுலின் சுரக்க, சுரக்க உங்கள் உடல் அதை எடுத்துக் கொள்ளாது.
ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட சில டெஸ்ட்டுகள் மூலம் உங்கள் கொலஸ்ட்ரால் மற்றும் ரத்தச் சர்க்கரை அளவுகள் பரிசோதிக்கப்பட வேண்டும். எத்தனை நாட்களுக்கொரு முறை அசைவ உணவுகள் சாப்பிடலாம் என்பது ஒவ்வொருவரின் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தும் முடிவு செய்யப்பட வேண்டும். நடக்கும்போது மூச்சு வாங்குகிறதா, கொழுப்பு அதிகமிருக்கிறதா, ரத்த அழுத்தம் அதிகமிருக்கிறதா, உடல் பருமன் இருக்கிறதா என்பதையெல்லாம் கவனிக்க வேண்டும்.