நேராக நடக்கும் போதும், குதிக்கும் போதும் மேலிருந்து கீழாக எலும்புகளுக்கு அழுத்தம் வரும். எட்டுவடிவத்தில் நடக்கும்போது கூடுதலாக வேறு திசைகளிலிருந்தும் அழுத்தம் வருகிறது. அது எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவும் என்கின்றன ஆய்வுகள். அதனால் இந்த வகை நடை பலருக்கு அறிவுறுத்தப்படுகிறது.
கடுமையான மூட்டுவலி உள்ளவர்கள் பொதுவாகவே நடைப்பயிற்சியைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக எட்டு நடையைத் தவிர்ப்பது நல்லது. கூழாங்கற்களின் மேல் நடப்பது என்பது கிட்டத்தட்ட மசாஜ் போன்றது. மசாஜ் என்பது ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும் ஒரு செயல். ரத்த ஓட்டம் அதிகரிக்கும்போது அது தசைகளுக்கும் சீரான ரத்த ஓட்டத்தைக் கொடுக்கும். அதன் விளைவாக தசைகளின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். தசைகள் எலும்புகளோடு இணைந்து, அதனால்தான் எலும்புகள் வேலை செய்கின்றன. எனவே எலும்புகளின் செயல்பாடும் இதனால் மேம்படுகிறது.
இதெல்லாம் ஒருபுறமிருக்க, புதிதாக நடைப்பயிற்சியை ஆரம்பிக்கப் போகிறவர்கள், அதற்கு முன் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். குடும்ப பின்னணியில் யாருக்காவது இதய நோய்கள் இருக்கின்றனவா, அதனால் குடும்பத்தில் யாராவது இறந்திருக்கிறார்களா, தலைச்சுற்றல் பாதிப்பு இருக்கிறதா, மூட்டு தொடர்பான பிரச்னைகள் இருக்கின்றனவா என்றெல்லாம் பார்க்க வேண்டும். இவற்றில் ஒன்று இருந்தாலும் மருத்துவரை அணுகி, உடற்பயிற்சிக்குத் தகுதியாக இருக்கிறாரா என்பதை உறுதிபடுத்திக் கொண்டு தொடங்குவது பாதுகாப்பானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.