என் வயது 45. கடந்த 10 வருடங்களாக எனக்கு ரத்த அழுத்தம் இருக்கிறது. அதற்கான மருந்துகளைத் தினமும் இரவில் எடுத்து வருகிறேன். என் எடை 110 கிலோ. நான் இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் முறையில் எடையைக் குறைக்க முயலலாமா?
– அல்ஃபோன்ஸ் கைசர் (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்.
“இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் என்பது விரதத்துக்கும் உண்ணும் காலத்துக்குமிடையிலான சுழற்சி முறை. கலோரிகளில் கவனமாக, கட்டுப்பாட்டுடன் இருப்பது, போதுமான அளவு புரதச்சத்து எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி ஆகியவை சரியாகப் பின்பற்றப்பட்டால் இந்த முறை நல்ல பலன் தரும். இரண்டு மணி நேரத்துக்கொரு முறை சாப்பிடும் பழக்கமுள்ளவர்கள் இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் முறையைப் பின்பற்றுவதன் மூலம் அந்தப் பழக்கத்திலிருந்து வெளியே வர முடியும்.
ஆனால், இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்ட்டிங் என்றில்லை, எந்த டயட் முறையையும் மருத்துவர் மற்றும் டயட்டீஷியனின் ஆலோசனை இல்லாமல் பின்பற்றக் கூடாது. அதிலும் குறிப்பாக, ஏதேனும் உடல்நல பாதிப்பு உள்ளவர்களும், மருந்துகள் எடுத்துக் கொள்வோரும் குறிப்பிட்ட அந்த டயட்டின் சாதக, பாதகங்கள் குறித்து மருத்துவர் மற்றும் டயட்டீஷியனிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.