Doctor Vikatan: உடற்பயிற்சி செய்கிற அனைவருக்கும் `வே புரோட்டீன்' அவசியமா?

Share

Doctor Vikatan: நான் கடந்த ஆறு மாதங்களாக ஜிம்மில் சேர்ந்து உடற்பயிற்சிகள் செய்து வருகிறேன். அங்கே என்னை ‘வே புரோட்டீன்’ எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறார்கள். வொர்க் அவுட் செய்கிற எல்லோருக்கும் ‘வே புரோட்டீன்’ என்பது அவசியமா? அதை எப்படித் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும்?

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.

ஸ்ரீமதி வெங்கட்ராமன்

சராசரி இந்தியர், ஒரு நாளைக்கு 45 கிராம் தான் புரதம் எடுத்துக்கொள்கிறார். அது ரொம்பவே குறைவுதான். மேற்கத்திய நாட்டவரைப் போல நாம் அதிகம் புரதம் எடுத்துக்கொள்வதில்லை என்பதுதான் உண்மை. அசைவ உணவுப்பழக்கம் உள்ளவர்களும் தினமும் அசைவம் சாப்பிடாத நிலையில் அவர்களுக்கும் இது பொருந்தும்.

பள்ளி இறுதி முடித்துவிட்டு வெளியே வரும் ஆண்களுக்கு உருண்டு, திரண்ட தசைகளோடு ஆண்மையாகத் தெரிய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஜிம்மில் சேர்ந்து வொர்க் அவுட் செய்ய நினைக்கிறார்கள். ஜிம் பயிற்சியாளர் அறிவுறுத்துவதன் பேரில் ‘வே புரோட்டீன்’ என்ற ஒன்றை எடுத்துக்கொள்கிறார்கள். ‘வே புரோட்டீன்’ எடுத்துக்கொள்வதில் தவறில்லை. ஆனால் அதில் சில விஷயங்களை கவனிக்க வேண்டியது அவசியம். ‘வே புரோட்டீனி’ல் ‘ஐசலேட்’ மற்றும் ‘கான்சென்ட்ரேட்’ என இருவகை கிடைக்கிறது. இந்த இரண்டில் ஐசலேட் வகையே சிறந்தது.

ஆனால் எல்லோரும் ‘வே புரோட்டீன்’ எடுத்துக்கொள்ளலாமா என்பது அவரவர் உடல் உழைப்பையும், தேவையையும் பொறுத்து முடிவுசெய்யப்பட வேண்டியது. வெறும் உடல் கட்டமைப்புக்காக எடுத்துக்கொள்ள விரும்புகிறாரா, வேறு ஏதேனும் பிரச்னைகள் இருந்து அதன் காரணமாக தசையிழப்பு ஏற்படுகிறதா என்பதையெல்லாம் பார்த்து, தகுதியான மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து ஆலோசகரின் பரிந்துரையோடு எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

Gym

‘பாடி காம்போசிஷன் அனாலிசிஸ்’ என்பதைப் பார்த்து, ஒருவருடைய புரோட்டீன் தேவையையும் பார்த்து அதற்கேற்ப அவர்கள் ஆலோசனை சொல்வார்கள்.

இப்படிச் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் விளம்பரப்படுத்தப்படுகிற ‘வே புரோட்டீனை’ நீங்களாக வாங்கிப் பயன்படுத்தக்கூடாது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com