கஃபைனின் தூண்டுதல் திறனானது குறைந்தது 3 முதல் அதிகபட்சமாக 5 மணி நேரம்வரை நீடிக்கும். அது ஒவ்வொருவருக்கும் வேறுபடலாம். எடுத்துக்கொள்ளும் கஃபைனில் பாதி அளவானது 5 முதல் 7 மணி நேரம் வரை உடலில் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. எனவே இரவு தூங்கச் செல்வதற்கு முன், இரவு உணவுடன் அல்லது இரவு உணவுக்குப் பிறகெல்லாம் காபி குடிப்பது நிச்சயம் உங்கள் தூக்கத்தை பாதிக்கும். தூங்குவதற்கு 6 மணி நேரத்துக்கு முன்பு உங்கள் கடைசி காபியை நிறுத்திக்கொள்வது நல்லது. மாலை 4 மணிக்கு மேல் காபி குடிக்காமல் இருப்பது சிறந்தது. அதிக அளவு காபி குடிப்பது சிலருக்கு மனப்பதற்றத்தை ஏற்படுத்தலாம்.
உங்களுக்கு தூக்கத்தில் பிரச்னை, தலைவலி, வாந்தி, படபடப்பு போன்றவை இருந்தால், அவையெல்லாம் அதிக அளவு காபி குடிப்பதன் அறிகுறிகளாக இருக்கக்கூடும். எனவே தினமும் 2 கப்புக்கு மேல் காபி குடிப்பதைத் தவிருங்கள். ஒருவேளை உங்களுக்கு இரும்புச்சத்துக் குறைபாடு, குடல் தொடர்பான பிரச்னைகள், பருக்கள் போன்றவை இருந்தால் காபியை அறவே தவிர்ப்பதுதான் நல்லது. காபிக்கு பதிலாக க்ரீன் டீ, மூலிகை டீ, சாமந்திப்பூ டீ போன்றவற்றைப் பருகலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.