Doctor Vikatan: என் குழந்தைக்கு இரண்டாண்டுகள் முடிந்து விட்டன. ஆட்டிசம் தொடர்பான கட்டுரைகளைப் படிக்கும்போது அவனுக்கும் அந்த பாதிப்பு இருப்பதாகவே உணர்கிறேன். இதற்காக எந்த மருத்துவரை அணுக வேண்டும்? அவன் வளர்ச்சியில் பெற்றோரின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும்?
பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவர் சஃபி

குழந்தைக்கு இரண்டு வயது என்கிறீர்கள்… அதற்குள் குழந்தையின் நடவடிக்கைகளை வைத்து ஆட்டிசம் அறிகுறிகள் என நீங்களாக முடிவுக்கு வருவது எந்த அளவுக்கு சரி என தெரியவில்லை.
இந்த வயதில் குழந்தையின் சில நடவடிக்கைகளில் ஆட்டிசம் அல்லது ஏடிஹெச்டி எனப்படும் கற்றல் குறைபாட்டின் அறிகுறிகள் போலவே தோன்றலாம். அவையெல்லாம் அந்த வயதுக்கே உரிய குறும்புகளாகவே இருக்கும். எனவே அனாவசியமாக பயப்பட வேண்டாம்.

பொதுவாக குழந்தையின் 3 வயதுக்குப் பிறகுதான் ஆட்டிசம் குறைபாட்டுக்கான அறிகுறிகள் தென்படுகின்றனவா என்பதை மருத்துவர்கள் பரிசோதனை செய்து உறுதிபடுத்துவார்கள். இப்போதைக்கு உங்கள் குழந்தையை வழக்கமாகப் பார்க்கும் குழந்தைநல மருத்துவரிடமே இது குறித்தும் கலந்தாலோசியுங்கள். குழந்தையிடம் வித்தியாசமான அறிகுறிகள் தென்பட்டால் அவரே பார்த்துச் சொல்வார்.
குழந்தைக்கு டி.வி காட்டும் (ஸ்கிரீன் டைம்) நேரத்தைக் குறைத்துவிடுங்கள். விளையாடுவதற்காக செல்போன் கொடுக்காதீர்கள். குழந்தையிடம் யாராவது ஒருவர் பேசிக்கொண்டே, பாடிக்கொண்டே இருக்க வேண்டும். குழந்தையைப் பேச வைக்கவும் பாட வைக்கவும் முயற்சி செய்யலாம். அதாவது குழந்தை, வீட்டிலுள்ள மனிதர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டுமே தவிர, கேட்ஜெட்டுகளுடன் விளையாடிக்கொண்டிருக்கக் கூடாது.
குழந்தைக்கு நல்ல ஆரோக்கியமான உணவுகளைக் கொடுங்கள். முட்டை போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளைக் கொடுங்கள். குழந்தைக்கு ஸகிரீன் டைம் அதிகரிக்காமல், அதாவது ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஒரு மணி நேரமோ, இரண்டு மணி நேரமோ மட்டும் ஸகிரீன் டைம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.