Doctor Vikatan: என் வயது 35. இரண்டு குழந்தைகள் உள்ளனர். எனக்கு ஆறு மாதங்களுக்கொரு முறைதான் மாதவிலக்கு வருகிறது. அதை முறைப்படுத்த சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டா?
– Krithik , விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

ஆறு மாத காலமாக மாதவிடாய் வராததற்கு அடிப்படையான காரணம் என்ன என்பதை முதலில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ரத்தசோகை காரணமாகவோ, தைராய்டு பாதிப்பு உள்ளிட்ட ஹார்மோன் கோளாறுகள் காரணமாகவோ இப்படி இருக்கலாம். காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. மற்றபடி உங்கள் தினசரி வாழ்க்கையில் நீங்கள் பின்பற்ற வேண்டிய பொதுவான சில விஷயங்களை நான் உங்களுக்கு விளக்குகிறேன்.
முதல் விஷயம் பகல் தூக்கம் தவிர்ப்பது. அதைத் தவிர்த்தாலே ஹார்மோன் தொந்தரவுகள் இருக்காது. இரவில் சரியான நேரத்துக்குத் தூக்கம் வரும். அடுத்தநாள் காலையில் சரியான நேரத்துக்கு கண்விழிக்கவும் முடியும்.
உணவு விஷயத்தைப் பொறுத்தவரை முருங்கைக்கீரை, கறிவேப்பிலை, கரிசலாங்கண்ணி, வல்லாரை போன்றவற்றையும், ஆவாரம்பூ, சுண்டைக்காய், வாழைக்காய், அத்திக்காய் போன்று துவர்ப்புச்சுவையுள்ளவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். வேப்பம்பூவில் ரசம் வைத்துச் சாப்பிடலாம். மாதுளம் பழம் சாப்பிடுங்கள். மாதுளம் பழத்தோலை நீரில் கொதிக்கவைத்து, அந்த நீரைக் குடித்தால் ஃபோலிக் அமிலம் சேரும். கழற்சிக்காயில் ஐந்தை முதல்நாள் இரவே ஊறவைத்து, மறுநாள் அதைத் தட்டி உள்ளே உள்ள பருப்பை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

இவையெல்லாம் கருமுட்டை உற்பத்திக்கு உதவும். மாதவிலக்கு சுழற்சியை சீராக்கும். கறுப்பு கொண்டைக்கடலை, பாசிப்பயறு போன்றவற்றில் சுண்டல் செய்து சாப்பிடலாம். இவையெல்லாம் உங்கள் ஆரோக்கியத்துக்கு உதவுபவை. ஆனால் ஆறு மாத காலமாக மாதவிடாய் வராததற்கான காரணம் அறிந்து, அதற்கான மருந்துகளோடு மேற்குறிப்பிட்ட விஷயங்களையும் சேர்த்துப் பின்பற்றுங்கள். இரும்புச்த்துள்ள உணவுகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.